இந்தியா

கேரளாவில் பள்ளிச் சுற்றுலா பேருந்து விபத்து: மாணவர்கள் உள்பட 9 பேர் பலி

செய்திப்பிரிவு

பாலக்காடு: கேரளாவில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உள்பட 9 பேர் பலியாகினர். கேரள மாநிலம் பாலக்காட்டில் தனியார் சுற்றுலா வாகனம் அரசுப் பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது.

இது குறித்து கேரள போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி ராஜூ கூறுகையில், "நேற்றிரவு 11.30 மணிக்கு விபத்து நடந்துள்ளது. தனியார் பேருந்து அதிகமாகச் சென்று முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்த முயன்றுள்ளது. அதில் விபத்து நடந்தது. இதில் 5 மாணவர்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். தனியார் பேருந்து ஓட்டுநரின் அலட்சியம் மற்றும் பேருந்தின் அதி வேகம் காரணமாகவே விபத்து நடந்துள்ளது" என்றார்.

தனியார் பேருந்தில் 42 மாணவர்களும் 5 ஆசிரியர்களும் இருந்தனர். அவர்கள் அனைவரும் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த வித்யாநிகேதன் சீனியர் செகண்ட்ரி பள்ளியைச் சேர்ந்தவர்களாவர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் பாலக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மாநில வருவாய் துறை அமைச்சர் கே.ராஜன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT