இந்தியா

கர்நாடக சட்டமன்ற இடைத்தேர்தல்: எடியூரப்பா மகன் போட்டி

இரா.வினோத்

கர்நாடக சட்டமன்ற இடைத் தேர்தலில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா, ஷிமோகா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் முன்னாள் முதல் வர் எடியூரப்பா ஷிமோகா தொகுதியிலும், முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு பெல்லாரி தொகுதியிலும் போட்டியிட்டு வென்றனர். இதேபோல காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் பிரகாஷ் ஹுக்கேரி, சிக்கோடி தொகுதியில் வெற்றி பெற்றார்.

இவர்கள் மூவரும் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் அந்த 3 தொகுதிகளுக்கு வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் 3 தொகுதி களுக்கும் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர். அதன்படி ஷிமோகா சட்டமன்ற தொகுதிக்கு, எடியூரப்பாவின் மகனும், ஷிமோகா மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான பி.எஸ்.ஒய். ராகவேந்திரா அறிவிக்கப்பட்டுள்ளார். பெல்லாரி ஊரகம் தொகுதிக்கு ஓபலேஷ், சிக்கோடி தொகுதிக்கு மகந்தேஷ் ஆகியோர் வேட்பாளர் களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கட்சியில் அதிருப்தி

இந்நிலையில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு கட்சியின் மூத்த தலைவர்களிடையே அதிருப்தி எழுந்துள்ளது.எடியூரப்பாவும் ராகவேந்திராவும் பாஜகவை விட்டு வெளியே சென்று மீண்டும் வந்தவர்கள். அவர்களுக்கு மீண்டும் கட்சியில் முக்கியத்துவம் அளிப்பது தங்களை அவமதிப்பதாக உள்ளது என மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.

இதே போல பெல்லாரி ஊரக தொகுதியில் முன்னாள் அமைச்சர் ராமுலுவின் சகோதரி சாந்தாவின் பெயர் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், அங்கு ஓபலேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு பெல்லாரி ரெட்டி சகோதரர்களின் ஆதரவாளர்களும், சில மூத்த தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேட்பாளர்களை மாற்றவேண்டும் என டெல்லி தலைமைக்கு கடிதம் எழுதப்போவதாக தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT