ரூ.500, 1000 நடவடிக்கைக்குப் பிறகு பணப் பரிவர்த்தனையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், அவதிகள் குறித்து அருண் ஜேட்லி சனிக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது நாட்டில் உள்ள சுமார் 2 லட்சம் ஏடிஎம் இயந்திரங்களை புதிய நோட்டுகளை எடுக்க வசதியாக மாற்றி அமைக்கும் பணிகள் 2 வாரங்களில் நிறைவடையும் என்று நம்பிக்கை அளித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அருண் ஜேட்லி மேலும் கூறியதாவது:
நாடு முழுவதும் ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த அறிவிப்புக்கு ஆதரவு அளித்து வரும் மக்களுக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் காலை முதல் நள்ளிரவு வரை சிரமம் பார்க்காமல் பணியாற்றி வருகின்றனர், அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்து சிரமங்களையும் மக்கள் பொறுத்துக்கொண்டு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். சிரம காலங்கள் குறுகிய நாட்களுக்குத்தான். ஆனால், இதனால் அடையப்போகும் பயன் மிகவும் பெரியது.
பணப் பரிமாற்றங்களை நிதித்துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது. சிரமங்கள் ஏற்படும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம், ஆனாலும் நாட்டின் மிகப்பெரிய ஒரு நடவடிக்கை நடந்தேறி வருகிறது, இதனால் சிரமங்கள் தவிர்க்க முடியாதது.
எவ்வளவு தொகைகள் வங்கிகளிலிருந்து எடுக்கப்படுகிறது, எவ்வளவு தொகை வரவு வைக்கப்படுகிறது போன்ற விவரங்களை வங்கிகளிடமிருந்து அவ்வப்போது பெற்று வருகிறோம்.
இன்று பகல் 12.15 மணி வரை பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் ரூ.2 கோடியே 28 லட்சம் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. எஸ்பிஐ-யில் ரூ.47,868 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 58 லட்சம் பேர் இதுவரை தங்கள் பழைய நோட்டுகளை மாற்றிச் சென்றுள்ளனர்.
புதிய நோட்டுகளின் வடிவத்திற்கு ஏற்ப ஏடிஎம் எந்திரங்களை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் சிரமம் ஏற்பட்டுள்ளது, இந்தப் பணிகள் இரண்டு வாரங்களில் நிறைவடையும். தொழில்நுட்ப விஷயங்கள் இதில் உள்ளன. ரகசியமும் காக்கப்பட வேண்டும் என்பதால் காலதாமதம் தவிர்க்க முடியாதது. ஆனாலும் விரைவில் சரிசெய்யப்படும்.
இந்த நடவடிக்கை குறித்த பல்வேறு அரசியல் கட்சிகளின் விமர்சனங்கள் பொறுப்பற்றவையாக உள்ளன. சிலர் ஜூலை முதல் செப்டம்பர் வரை டெபாசிட்கள் அதிகரித்ததை குற்றச்சாட்டாக முன் வைக்கின்றனர். செப்டம்பரில் மட்டும்தான் அதிகரித்துள்ளது அதுவும் பே கமிஷன் அரியர்ஸ் தொகை அளிக்கப்பட்டதால் அதிகரித்த தொகையே. சிலருக்கு நம் அமைப்பைச் சுத்தம் செய்வது பிடிக்கவில்லை.
பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன, அதனை நம்பவேண்டாம், அவற்றில் உண்மை இல்லை. ரூ.2000 நோட்டில் தடம் காணும் சிப் பொறுத்தப்பட்டுள்ளதாக வதந்தி உலவி வந்தது. இதில் உண்மையில்லை. கள்ள நோட்டுகளையும் அரசு கண்காணித்து வருகிறது. போதிய பணம் உள்ளது, அவை வங்கிகளுக்கும் தபால் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
வர்த்தகர்கள் டிஜிட்டல் முறையில் தொகை செலுத்துதல் போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்க வேண்டும் என்று அரசு அவர்களிடம் கேட்டுக் கொள்கிறது. புதிய நிதி ஒழுங்கமைப்பில் வாழ்க்கை எளிமையாக அமையும்.
எங்களது கவனம் முழுதும் பணத்தை மாற்றும் நடவடிக்கையை விரைவு படுத்துவதே. அமலாக்க துறை மற்றும் பிற முகமைகள் சட்ட விரோத நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர். ஜன் தன் கணக்குகளை துஷ்பிரயோகம் செய்வதாக செய்திகள் வருகின்றன. இதற்குரிய துறைகள் இத்தகைய சட்ட விரோத நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றன.
பணப்பரிமாற்றத்தில் எவருக்கும் முன்னுரிமை கிடையாது. புதிய நோட்டுகளில் உள்ள கூடுதல் பாதுகாப்பு அம்சங்களால் கள்ள நோட்டுகள் கடினமாகிவிடும்.
வங்கிகள் விவகாரத் துறை செயலரிடம் மூத்த குடிமக்கள் சிரமமில்லாமல் பணத்தை மாற்றிச் செல்ல வங்கிகளுக்கு வழிகாட்டுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. காசோலைகளே பாதுகாப்பான பணம் செலுத்தும் வழிமுறை. அனைவரும் வங்கிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு கூறினார் அருண் ஜேட்லி.