இந்தியா

சமஸ்கிருதத்தில் கிரிக்கெட் வர்ணனை - சிறுவர்களின் விளையாட்டுக்கு மோடி பாராட்டு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சமஸ்கிருத மொழியில் கிரிக்கெட் வர்ணனை செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அத்துடன் வைரலாகியுள்ள சிறுவர்களின் கிரிக்கெட் ஆட்ட வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

கிரிக்கெட் குறித்த எத்தனையோ வீடியோக்கள் வலைதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. எனினும், பழமையான, பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழியில் வர்ணனை செய்யப்பட்ட கிரிக்கெட் வீடியோவை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். பெருங்களூருவில் குடியிருப்புப் பகுதி ஒன்றின் வீதியில் சிறுவர்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த கிரிக்கெட் விளையாட்டை சிறுவன் ஒருவர் சமஸ்கிருதத்தில் வர்ணனை செய்கிறார். இந்த வீடியோவை “சமஸ்கிருதம் மற்றும் கிரிக்கெட்” என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் லக்ஷ்மி நாராயண பிஎஸ் என்பவர் பகிர்ந்துள்ளார். 45 விநாடி நேரமே வரும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதனைப் பார்த்த பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பதிவில், “இதைக் காண மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த முயற்சியை மேற்கொண்டவர்களுக்கு வாழ்த்துக்கள். இதேபோன்ற முயற்சி காசியில் கடந்த ஆண்டு நடைபெற்றபோது அதனை மன் கி பாத் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துகொண்டேன். இதையும் பகிர்ந்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில், சமஸ்கிருதம் பேசுபவர்கள் இந்திய மக்கள் தொகையில் 0.002 சதவீதத்திற்கும் குறைவு. அவ்வகையில் இந்தியாவில் சமஸ்கிருதம் பேசுபவர்கள் எண்ணிக்கை 24,821 பேர் ஆவர்.

SCROLL FOR NEXT