டெல்லியில் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான புகை மூட்டம் காணப்படுவதால், முகமூடியை (ஏர் மாஸ்க்) வாங்க கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
வழக்கமாக டெல்லியில் ஆண்டுதோறும் தீபாவளி சமயத் தில் பட்டாசு வெடிப்பதால் பரவும் புகை மாசிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முகமூடிகள் அதிகளவில் விற்கப்படும். அதற்கேற்ப வர்த்தகர்கள் இவற்றை கூடுதலாக இருப்பு வைத்திருப்பார்கள்.
ஆனால் இம்முறை வழக்கத்தை விட, 10 மடங்கு கூடுதலாக முக மூடிக்கு தேவை ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். டெல்லி மற்றும் அதையொட்டிய பகுதிகளில் பல பள்ளிகளில், மாணவர்களுக்கு முகமூடி கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது. தனியார் நிறு வனங்களும், பணியாளர்களுக்காக மொத்தமாக முகமூடி வாங்கு கின்றன.
டெல்லி பகுதியில் போதிய இருப்பு இல்லாததால் பக்கத்து ஊர்களுக்குச் சென்று முகமூடியை வாங்கி வரும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், பலர் ஆன்லைன் மூலம் இவற்றை ஆர்டர் செய்து பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இந்த முகமூடிகள் ரூ.90 முதல் 2,200 வரை சந்தையில் கிடைக்கின் றன. முகமூடி தவிர, ஏர் ப்யூரிஃ பையர் எனப்படும் காற்று சுத்தி கரிப்பு இயந்திரத்துக்கும் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. ஷாப்பிங் மால், அலுவலகங்கள், வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் இந்த இயந்திரத்தை பொருத்த சம்பந்தப் பட்ட நிறுவனங்களை மக்கள் முற்றுகையிட்டு வருகின்றனர்.
செயற்கை மழை திட்டம்
டெல்லியில் கடந்த 17 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு கடுமை யான மாசு படிந்த புகை மூட்டம் நிலவுவதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் தெரிவித் துள்ளது. காற்று உச்ச நிலையில் மாசடைந்திருப்பதால், சுகாதார அவசர நிலையை மாநில அரசு அறிவித்துள்ளது.
போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கிவிட்டுள்ள முதல்வர் கேஜ்ரிவால், அடுத்த 5 நாட்களுக்கு பஞ்சாப், ஹரியாணா பகுதிகளில் பயிர் களை கொளுத்த வேண்டாம், டெல்லியில் கட்டிடங்களை இடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவசரமாக கூட்டப்பட்ட அமைச் சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேஜ்ரிவால், ‘குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். புதன் கிழமை (9-ம் தேதி) வரை பள்ளிகளுக்கு விடுமுறை. நகரில் செயற்கை மழை பொழிய வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய அரசுடன் ஆலோ சிக்கப்படும்’ என்றார்.