இந்தியா

அசாம் பதஞ்சலி உணவுப் பூங்காவில் யானை பலி: கட்டுமான நிறுவனர் மீது வழக்கு

பிடிஐ

அசாம் மாநிலம் சோனிட்பூரில் கட்டப்பட்டு வரும் பதஞ்சலி உணவுப் பூங்காவில் இருந்த குழியில் விழுந்து பெண் யானை இறந்தது தொடர்பாக கட்டுமான நிறுவனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை பதஞ்சலி நிறுவனத்துக்கு சொந்தமான உணவுப் பூங்காவில் உள்ள குழியில் விழுந்த பெண் யானை ஒன்று உயிரிழந்தது.

இது குறித்து அசாம் வனத்துறையின் கூடுதல் பாதுகாப்பாளர் ஜாசிம் அகமத் கூறும்போது, "சோனிட்பூரில் பதஞ்சலி நிறுவனத்துக்கு சொந்தமான உணவுப் பூங்கா கட்டப்பட்டு வருகிறது. கட்டிடப் பணியிடத்தில் 14 மூடப்படாத குழிகள் இருந்துள்ளன.

இவற்றில் ஒரு குழியில் தவறிவிழுந்த பெண் யானை ஒன்று பலியானது. இது தொடர்பாக பூங்காவின் நிறுவனரும், பதஞ்சலி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளருமான உதய் கோஸ்வாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் யனையின் இறப்புக்குப் பிறகு உணவுப் பூங்காவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வன அமைச்சர் மேற்பார்வையிட்டதில் 14 குழிகள் மூடப்படாத நிலையில் உள்ளது உறுதிபடுத்தப்பட்டது" என்று கூறினார்.

இந்த சம்பவத்தை அடுத்து யானைகளின் வழித்தடங்களுக்கு தொத்தரவு ஏற்படாதபடி இடமளித்து பூங்கா கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளுமாறு பதஞ்சலி நிறுவனத்துக்கு அசாம் வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT