இந்தியா

உ.பி. தேர்தலில் கட்சி ஆலோசகரின் நடவடிக்கைகளை முடக்கியது காங்கிரஸ்: நிர்வாகிகள் புகாரால் பிரியங்காவிடம் பொறுப்பு ஒப்படைப்பு

ஆர்.ஷபிமுன்னா

உத்தரப் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சி தங்கள் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் நடவடிக்கைகளை தற்காலிகமாக முடக்கியுள்ளது. பிரியங்கா வதேராவிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி செய்யும் உ.பி..யில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. இதையொட்டி தேர்தல் மற்றும் பிரச்சார உத்தி குறித்து ஆலோசனை வழங்குவதற்காக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரச்சாரத்தை திட்டமிட்ட பிரசாந்த் கிஷோர், கடந்த ஆண்டு பிஹாரில் நிதிஷ்குமார், லாலு பிரசாத் கூட்டணிக்கு பணியாற்றினார். இவர்களுக்கு கிடைத்த வெற்றி காரணமாக பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ், உ.பி. மற்றும் பஞ்சாப் மாநில தேர்தல்களுக்கு தங்கள் ஆலோசகராக நியமித்துள் ளது. ஆனால் இவரது நடவடிக் கைகள் உ.பி. மாநில காங்கிரஸ் நிர்வாகிகளை அதிருப்திக்குள் ளாக்கி உள்ளது. இதனால் காங்கிரஸ் தலைமைக்கு தொடர்ந்து வந்த புகார்கள் காரணமாக உ.பி. மாநில பிரச்சாரப் பொறுப்பில் இருந்து பிரசாந்த் கிஷோர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் உ.பி. காங்கிரஸ் நிர்வாகிகள் வட்டாரத்தில் கூறும்போது, “உ.பி.யில் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பிரசாந்த்தின் நடவடிக்கைகள் இன்னும் எடுபடவில்லை. அவரது யோசனையால் ராகுல் காந்தி கடந்த செப்டம்பரில் தியோரியா முதல் டெல்லி வரை கட்டில் சபை நடத்தினார். இதில் ராகுல் திருப்தி அடையவில்லை. உ.பியில் ஆட்சியை பிடிப்போம் என்ற முழக் கத்தை அறிமுகப்படுத்திவிட்டு, சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டுசேர பிரசாந்த் செய்த முயற்சியும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பஞ்சாப் தேர்தல் பணியை மட்டும் கவனிக்க கிஷோருக்கு உத்தர விடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் உ.பி. தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ராகுல், பிரியங்கா, கட்சியின் உ.பி. தேர்தல் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத், மாநிலத் தலைவர் ராஜ்பப்பர், மூத்த தலைவர்கள் பிரமோத் திவாரி, சஞ்சய்சிங், ஆர்.பி.என்.சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு பிரசாந்த் கிஷோரை உ.பி. பிரச்சாரத்தில் இருந்து தற்காலிகமாக விடுவிப்பது எனவும் இப்பொறுப்பை பிரியங்காவிடம் அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரியங்கா உ.பி.யில் முகாமிட்டு, பிரசாந்தால் ஏற்பட்ட சிக்கல்களை சரி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT