தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், வியாழனன்று வேத மந்திரங்கள் முழங்க ரூ.40 கோடி செலவில் கட்டப்பட்ட அதிகாரபூர்வ ‘கனவு இல்லத்தில்’ குடியேறினார்.
மனைவி ஷோபா ராவ், மகன் கே.டி.ராமாராவ், அமைச்சரவை சகாக்கள் மற்றும் மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் இன்று காலை 5.22 மணியளவில் சந்திரசேகர ராவ் 10 ஏக்கர் நிலப்பரப்பில், குண்டு துளைக்காத குளியலறை கொண்ட 1 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்ட பேகம்பேட்டை கட்டிடத்தில் சந்திரசேகர ராவ் அடியெடுத்து வைத்தார். இது அவரது அலுவலகம் மற்றும் வசிப்பில்லமாக விளங்கும்.
சின்ன ஜீயர் சுவாமியின் மேற்பார்வையில் நடைபெற்ற சுதர்சன யாகத்தில் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர். கிரகப்பிரவேசம் தவிர, தெய்வ பிரவேசம், பசுப்பிரவேசம் ஆகிய சடங்குகளை புரோகிதர்கள் செய்து வைத்தனர்.
ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன் அவரது மனைவி விமலா நரசிம்மன், சந்திரசேகர ராவின் மகளும் எம்.பி.யுமான கே.கவிதா, உறவினரும் மாநில அமைச்சருமான ஹரிஷ் ராவ் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் புடை சூழ புதுமனை புகுவிழா களைகட்டியது.
பிரகதி பவன் என்று பெயர் சூட்டப்பட்ட இந்த ‘அரண்மனை’ சுமார் ரூ.40 கோடி செலவில் கட்டப்பட்டதாக தெரிகிறது. இதில் முதல்வர் வசிப்பில்லம், அலுவலகம், கான்பர்ன்ஸ் ஹால் மற்றும் ஏற்கெனவே உள்ள 2 கட்டிடங்கள் அடங்கும்.
இந்த வளாகத்தில் இவரது மகனும் ஐடி துறை அமைச்சருமான கே.டி.ராமா ராவுக்கும் தனி வீடு கட்டப்பட்டுள்ளது. மேலும் சுமார் 1000 பேர் அமரக்கூடிய அரங்கமும் கட்டப்பட்டுள்ளன. இதுதவிர முதல் வர் அலுவலகமும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்தப் பகுதியில் சபாநாயகர், அமைச்சர்களுக்கான குடியிருப்புகளும் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா முதல்வருக்கு நக்ஸலைட்டுகளால் அச்சுறுத்தல் இருப்பதால், 24 மணி நேரமும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த புதிய வீட்டின் குளியலறை, கழிவறை மற்றும் படுக்கையறைகளில் குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிர வாஸ்து நம்பிக்கையாளர்:
வாஸ்து சாஸ்திரத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள சந்திரசேகர ராவ், மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ரூ.8.10 கோடி செலவில் கட்டிய அலுவலகத்தில் குடியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டார்.
ஏனெனில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி சடங்குகள் செய்யாமல் இதில் குடியேறியதால்தான் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார் என்று நம்பப்பட்டதால் சந்திரசேகர ராவ் வாஸ்து அறிஞர்களைக் கொண்டு புதிய இல்லத்தை வடிவமைத்தார்.
ராஜசேகர ரெட்டிக்கு அடுத்தபடியாக பதவி வகித்த ரோசையாவும் தனது பதவிக்காலத்தை முடிக்க முடியவில்லை, மேலும் பிரிவினையடையாத ஒருங்கிணைந்த ஆந்திரத்தின் கடைசி முதல்வரான கிரண் குமார் ரெட்டியும் இங்கு பல பிரச்சினைகளைச் சந்தித்தார், இதற்கு கட்டிடத்தின் வாஸ்து சரியாக இல்லாததே காரணம் என்று வாஸ்து அறிஞர்கள் சந்திரசேகர ராவுக்கு அறிவுரை வழங்கினர். இதனால் அவர் ராசியில்லாத கட்டிடம் என்று அந்தக் கட்டிடத்தை புறக்கணித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் தாக்கு:
ஏற்கெனவே உள்ள கட்டிடம் நல்ல நிலையில் இருக்கும் போது இந்த புதிய வளாகம் பொது மக்கள் பணத்தை விரயம் செய்வதாகும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் மொகமது அலி ஷபீர் கூறும்போது, ரோம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போல பணத்தட்டுப்பாட்டில் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் போது 5 நட்சத்திர பங்களாவில் அதன் குண்டுகள் துளைக்காத கழிவறை, படுக்கையறை என்று இவர் ஆடம்பரம் காட்டுகிறார் என்று தாக்கியுள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, 2.6 லட்சம் டபுள் பெட்ரூம் வீடுகளை ஏழைகளுக்காக கட்டித்தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த சந்திரசேகர ராவ் அதனை நிறைவேற்றாமல் ஆடம்பர பங்களாவுக்குக் குடிபெயர்ந்துள்ளார் என்றார்.
தெலுங்கு தேசம் கட்சியின் இளைஞர் அமைப்பான தெலுங்கு நாடு மாணவர் அமைப்பு சந்திரசேகர ராவ் புதிய இல்லத்தருகே ஆர்பாட்டம் நடத்தியதையடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.