இந்தியா

சிறையில் இருந்து தப்பியோடிய காலிஸ்தான் தீவிரவாதி டெல்லியில் கைது

செய்திப்பிரிவு

பஞ்சாப் சிறையில் இருந்து தப்பி யோடிய காலிஸ்தான் தீவிரவாதி ஹர்மிந்தர் மின்டூவை டெல்லி யிலும், நாபா சிறைத் தாக்குதல் திட்டத்துக்கு மூளையாக செயல் பட்ட நபரை உ.பி மாநிலத்திலும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம், பாட்டியா லாவில் உள்ள நாபா சிறைச் சாலைக்குள் ஞாயிற்றுக்கிழமை காலை மர்ம நபர்கள் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தி, சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலிஸ்தான் விடுதலை முன்னணி தலைவர் ஹர்மிந்தர் சிங் என்ற மின்டூ உள்ளிட்ட 6 கைதிகளை மீட்டுச் சென்றனர்.

இவர்கள் குறித்த தகவல் தருவோருக்கு ரூ.25 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். சிறையில் இருந்து தப்பிய மின்டூ டெல்லி சுபாஷ் நகரில் உள்ள உறவினருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலை வைத்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் டெல்லி ரயில் நிலையத்துக்கு அருகே மின்டூவை போலீஸார் சுற்றி வளைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில், தாக்குதல் சம்பவத்துக்கு சிறைச் சாலைக்கு உள்ளிருந்தே ஆதரவு கிடைத்திருப்பது தெரியவந்துள் ளது.

இதற்கிடையே, உ.பி.யின் மேற்கு மாவட்டத்தில் ஷாம்லி நகருக்கு அருகே டொயோட்டா பார்சூனர் காரில் வந்த பர்மிந்தர் சிங் என்பவரை போலீஸார் கைது செய்தனர். நாபா சிறைச்சாலை தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களில் அவரும் ஒருவர். காரில் இருந்து 3 ரைபிள்கள், ஒரு எஸ்எல்ஆர் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

முன்னதாக பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மின்டூவை போலீஸார் ஆஜர்படுத்தினர். மின்டூவை, 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. தப்பியோடிய மற்ற 5 கைதிகள் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.

சிறைச்சாலையில் இருந்து தப்பிய கைதிகளும், தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களும் ஆளுக்கொரு திசையாக பிரிந்து சென்றிருப்பதாகத் தெரிகிறது. எனவே, பஞ்சாபை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, ஹரியாணா மாநிலத்தில் கைதால் மாவட் டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஹுண்டாய் வெர்னா கார் ஒன்றை போலீஸார் கைப்பற்றினர்.

சிறைத் தாக்குதலில் ஈடுபட்டது 8 பேர்

உ.பி.யின் ஷாம்லி மாவட்டம், கைரானாவில் உள்ள சோதனைச் சாவடியில் பிடிபட்ட பர்மிந்தர் என்கிற பெண்டா, நாபா சிறைத் தாக்குதலுக்கு திட்டமிட்ட முக்கிய நபர் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து எஸ்.பி அஜய் சர்மா கூறும்போது, ‘நாபா சிறைத் தாக்குதலில் மொத்தம் 8 பேர் ஈடுபட்டனர். சம்பவத்தின்போது, பர்மிந்தர் டேராடூனில் இருந்துள்ளான்.

மற்ற 7 பேர் சிறையில் புகுந்துள்ளனர். வெளியில் இருந்தபடியே, 7 பேரையும் பர்மிந்தர் வழிநடத்தியுள்ளான். இதற்காக, வாட்ஸ்அப் மூலம் அவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளான்.

இதுதவிர, உ.பி, உத்தராகண்ட், பஞ்சாப் மாநிலங்களில் போதை பொருள் கடத்தல், பஞ்சாப் போலீஸ் அதிகாரி குருதேவ் கொலை வழக்கு மற்றும் ஏராளமான திருட்டு வழக்குகளிலும் பர்மிந்தர் சம்பந்தப்பட்டுள்ளான்’ என்றார்.

தொடர்புடைய விரிவான செய்திகள்:

SCROLL FOR NEXT