இந்தியா

சுஷ்மாவுக்கு சிறுநீரகம் தானம் செய்ய முன்வந்த போக்குவரத்து காவலர்

பிடிஐ

வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த போக்குவரத்துக் காவலர் ஒருவர் தனது சிறுநீரகத்தை தானமாக தர முன்வந்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் திஹார்கா கிராமத்தைச் சேர்ந்த 26 வயது காவலர் கவுரவ் சிங் டாங்கி. இவர், தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது சிறுநீரகங்களில் ஒன்றினை சுஷ்மாவுக்கு தானமாக அளிக்க விரும்புகிறேன். வெளியுறவு அமைச்சராக அவர் செயல்படும் விதம் என்னை வெகுவாக ஈர்த்துள்ளது. அவர் ஒரு சிறந்த தலைவர். அவருக்கு எனது சிறுநீரகத்தை தானமாக அளிக்க விரும்புகிறேன். ட்விட்டர் மூலம் இதனை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 7-ம் தேதியன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனியில் சுஷ்மா ஸ்வராஜ் அனுமதிக்கப்பட்டார்.

புதன்கிழமை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சிறுநீரகம் செயலிழந்துவிட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு டயாலஸிஸ் செய்யப்பட்டு வருகிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. கிருஷ்ணன் எனக்கு அருள் புரிவார்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அரசியல் தலைவர் ஒருவர் அதுவும் வெளியுறவு அமைச்சராக இருப்பவர் தாமாகவே தனது நோய் குறித்தும், மருத்துவ சிகிச்சை குறித்தும் வெளிப்படையாக தகவல் தெரிவித்தது பொதுமக்கள் மத்தியிலும் அரசியல் தலைவர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த போக்குவரத்து காவலர் ஒருவர் சுஷ்மாவுக்கு சிறுநீரக தானம் செய்ய முன்வந்துள்ளார்.

SCROLL FOR NEXT