இந்தியா

ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு கூடுதல் நிதி தேவை: ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொது பட்ஜெட்டில் இந்த திட்டத்துக்கு ரூ.43,499 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாநிலங்களுக்கு இதுவரை யில் ரூ.36,134 கோடி விடுவிக்கப் பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் இந்தத் திட்டத்துக்கு வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த ரூ,12,581 கோடி நிதியையும் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் அனுமதித்துள்ளது.

இதற்கிடையே. இந்த திட்டத்தை இந்த ஆண்டில் தடையின்றி அமல்படுத்த பட்ஜெட் ஒதுக்கீட்டுக்கும் மேலாக கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடி விடுவிக்கும்படி அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் ஒரு சில பகுதிகள் வறட்சியில் பிடியில் இருந்து இதுவரை மீண்டெழாமல் இருப்பதால் நடப்பு ஆண்டில் அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து வறட்சி பாதித்த மாவட்டங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 150 நாள் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT