‘அமைதிப் பேச்சுவார்த்தையே, மக்கள் ஜனநாயகக் கட்சியின் கொள்கை; போர் மனப்பான்மை அல்ல’ என்று காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி கூறியுள்ளார்.
ஜம்மு பகுதிக்கு உட்பட்ட மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட மற்றும் மண்டலத் தலைவர்களின் கூட்டம் ஜம்முவில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில முதல்வரும், கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி பேசியதாவது:
ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியின் கொள்கை எப்போதுமே, பேச்சுவார்த்தையும், அமைதிப் பிரச்சாரமும் தான். போர் மனப்பான்மையுடன் செயல்படுவது எங்களின் கொள்கையாக எப்போதும் இருந்ததில்லை.
காஷ்மீரில் தற்போதுள்ள அசாதாரண நிலைமையை சமாளிக்க, மறைந்த முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீதின் கொள்கைகளையும், திட்டங்களையும் நாம் முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
அவரின் அரசியல் தத்துவங்களை அமல்படுத்துவதன் மூலம், கடந்த சில மாதங்களாக காஷ்மீரில் நிலவும் பிரச்சினைகளை சரி செய்வதோடு, இந்தியா பாகிஸ்தான் இடையிலான உறவுகளையும் சீர்படுத்த முடியும்.
மாநிலத்தில் ஆட்சியமைக்க பாஜகவுடன் கைகோப்பது என்ற கடினமான முடிவை முப்தி முகமது எடுத்தார். மாநில மக்களின் நலனையும், முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டே அம்முடிவை அவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது.
வேறு வகையிலும் அவரால் ஆட்சி அமைத்திருக்க முடியும். ஆனால், மக்களின் சிரமங்களை உணர்ந்து அவற்றை தீர்க்க வேண்டும் என்ற நோக்கில் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் கூட்டணி வைத்தார்.
மாநிலத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்காக மகளிர் காவல் நிலையம், மகளிர் பேருந்து, ஸ்கூட்டி திட்டம், பெண் குழந்தை திட்டம் என பல்வேறு நலத் திட்டங்களை தீட்டி மாநில அரசு செயல்படுத்திவருகிறது. இந்த சூழலில் கட்சியின் கொள்கை மற்றும் திட்டங்கள் நிறைவேற்றும் பணிகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை கட்சி நிர்வாகிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு மெகபூபா பேசினார்