தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் விவகாரத்தில் இருதரப்பிலும் நிரந்தரத் தீர்வுக்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரிடையே நடைபெற்ற பேச்சுவார்தைகளில் இந்த முடிவு எட்டப்பட்டது.
தமிழக மீனவர் பிரச்னை, இலங்கைத் தமிழர் விவகாரம் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இலங்கையின் 13வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு இந்தியா விடுத்து வரும் கோரிக்கை, இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.
உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஆதரவைக் கோருதல் தொடர்பாகவும் இந்தச் சந்திப்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
பேராசிரியர் பெரீஸ் இதற்கு முன்பு கடந்த ஜனவரி மாதம் இந்தியா வருகை தந்தார், அப்போது அவர் வெளியுறவு அமைச்சராக இருந்த சல்மான் குர்ஷித்தை சந்தித்தார்.
பிறகு நரேந்திர மொடியின் பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு அதிபர் ராஜபக்சேவுடன் வருகை தந்திருந்தார்.
இன்றைய பேச்சுவார்த்தையில் தமிழக மீனவர்கள் பிரச்சினை அதிகம் விவாதிக்கப்பட்டது என்றும், நிரந்தரத் தீர்வுக்கான அவசியத்தை இருதரப்பிலும் ஒப்புக் கொண்டதாக வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்தார்.
கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்க அதிபர் ராஜபக்சேயின் விரைவு அணுகுமுறையை சுஷ்மா பாராட்டியதோடு நன்றி தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு மட்டும் 805 மீனவர்களை இலங்கை அரசு விடுவித்துள்ளது.