பெங்களூரு ஏடிஎம்மில் பணம் நிரப்ப அனுப்பப்பட்டிருந்த வேனில் இருந்து பணத்தை எடுத்துச்சென்ற ஓட்டுநரோடு, அவரின் மனைவியும் கொள்ளையில் இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கணவன், மனைவி இருவரும் தங்கள் உறவினர்களிடம், அடுத்த இரண்டு வருடங்களுக்கு, பெங்களூருவில் இருக்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளதன் அடிப்படையில் இந்த சந்தேகம் எழுந்துள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் நவம்பர் 23-ம் தேதி பேங்க் ஆப் இந்தியா வங்கியிலிருந்து ரூ.1.37 கோடி ரொக்கத்துடன் ஏடிஎம்.களில் பணம் நிரப்ப வேன் புறப்பட்டது. கெம்பகவுடா சாலைக்குச் சென்று ஏடிஎம்களில் பணம் நிரப்பச் சென்ற வேன், மதியம் 2 மணியளவில் மாயமானது. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் வேன் ஓட்டுநர் டொமினிக் செல்வராஜ் பணத்தை எடுத்துக்கொண்டு மாயமானது தெரியவந்தது.
தொடர்ந்த விசாரணையில், வேன் ஓட்டுநரின் மனைவி ஈவ்லின் ராய் பெங்களூருவுக்குத் திரும்பிய போது, திங்கட்கிழமை போலீசாரிடம் பிடிபட்டார். இதுகுறித்துக் காவல்துறை தரப்பில் கூறும்போது, ''செப்டம்பர் 30 முதல் நவம்பர் 17 வரை ஈவ்லின் துபாயில் இருந்துள்ளார். அங்கே செவிலித்தாயாகப் பணிபுரிந்தவர், சமீபத்தில் பெங்களூருவுக்குத் திரும்பியுள்ளார். பின்னர் கணவன் மனைவி இருவரும் தங்களின் சொத்தை விற்க உள்ளதாகவும் அடுத்த இரண்டு வருடங்களுக்கு, பெங்களூருவில் இருக்கமாட்டோம் என்றும் தங்கள் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால் வேன் ஓட்டுநரின் மனைவியான ஈவ்லின் ராயும், இந்தக் கொள்ளையில் இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ஆதாரங்களைத் திரட்டிக்கொண்டிருக்கிறோம். உரிய ஆதாரங்கள் கிடைத்த பின்னர் ஈவ்லினிடம் விசாரணை நடத்தப்படும். டொமினிக்கைத் தேடி, அனைத்து தென் மாநிலங்களுக்கும் சிறப்புப்படைகள் சென்றுள்ளன. ஈவ்லின் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, டொமினிக்கைச் சந்தித்துள்ளார்.
வேனோடு மாயமான ஓட்டுநர்
பணம் நிரப்பப்பட்ட வேனோடு மாயமான டொமினிக், வசந்த் நகரில் வண்டியை நிறுத்தியுள்ளார். வேனில் மூன்று பணப்பெட்டிகள் இருந்துள்ளன. இரண்டு பெட்டிகள் அதிக கனத்தோடு இருந்ததால், ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். பனாஸ்வாடி மாவு மில்லில் பெட்டியை உடைத்த டொமினிக், பணத்துடன் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அதே நாள் இரவில், டொமினிக், ஈவ்லின் மற்றும் அவர்களின் 12 வயது மகன் ஆகிய மூவரும் தமிழ்நாட்டில் வேலூருக்குப் புறப்படும் முன்னர், ஓர் உணவகத்தில் சாப்பிட்டுள்ளனர். அங்கிருந்து, கோயம்புத்தூர் வந்தவர்கள், கேரளாவின் திருச்சூருக்கு அருகில் உள்ள சாலக்குடிக்குச் சென்றுள்ளனர்'' என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் தொடர்ந்த விசாரணையில், அவர்கள் கத்தோலிக்க ஆலயத்துக்குச் சென்றதும், ஆந்திரப்பிரதேசத்தின் விஜயவாடா பகுதியில் இருந்த ஈவ்லினின் தாய்வழி அத்தையைச் சந்தித்ததும் தெரியவந்துள்ளது. திரும்பவும் அவர்கள் ஞாயிறு இரவில் பெங்களூருவுக்குத் திரும்பியதாகக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.