இந்தியா

சத்தம் இல்லாமல் டிஜிட்டல் புரட்சி: ஒட்டுமொத்த நாட்டையே வியப்பில் ஆழ்த்தும் குஜராத் குக்கிராமம்

செய்திப்பிரிவு

எஸ்எம்எஸ்ஸில் பணப் பரிவர்த்தனை செய்து அசத்தல்

குஜராத்தின் அகமதாபாத் நகரில் இருந்து 90 கி.மீ தொலைவில் சபர்காந்தா மாவட்டத்தில் உள்ளது அகோதரா கிராமம். பசுமை போர்த்திய வயல்வெளிகளுடன் குக்கிராமமாக அகோதரா காட்சி அளித்தாலும் பெரிய நகரங்களில் இல்லாத வசதிகள் இங்கு இருப்பது தான் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெற்ற நாள் முதலாக நாடு முழுவதும் பொது மக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகள் முன் நீண்ட வரிசையில் காத்திருந்தபோது, இந்த கிராம மக்கள் மட்டும் அதைப் பற்றி துளியும் அலட்டிக்கொள்ள வில்லை.

இது எப்படி சாத்தியமானது என்பது தான் அனைவர் மனதிலும் எழும் கேள்வி. காரணம் இது தான். இந்த கிராமத்தில் வாழும் 1,500 பேருக்கும் வங்கிக் கணக்கு இருக்கிறது. 24 மணி நேரமும் வை-பை வசதி வழங்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு முன், தனியார் வங்கி சோதனை ரீதியாக இந்த கிராமத்துக்கு ஒரு திட்டம் கொண்டு வந்தது. மொபைல் போன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்து கொள்வது தான் அந்த திட்டம். அதைத் தான் அகோதரா கிராமவாசிகள் தற்போது முழுமையாக பின்பற்றி வருகின்றனர்.

இதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த பியூஷ் படேல் என்பவர் கூறும்போது, ‘‘ரூ.10-க்கு குறைவாக பொருட்கள் வாங்க வேண்டியிருந்தாலும், எனது வங்கிக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பி, பொருள் வாங்கும் மளிகைக் கடையின் கணக்கையும் குறிப்பிடுவேன். அடுத்த நொடி எனது கணக்கில் இருந்த அந்த தொகை மளிகை கடைக்காரரின் கணக்குக்கு மாற்றப்படும்’’ என்கிறார்.

மளிகை கடை உரிமையாளர் ஒருவர் கூறும்போது, ‘‘பணத் தட்டுப்பாடு நாடு முழுவதும் பெரும் பிரச்சினையாக உள்ளது. ஆனால் எங்களுக்கு அந்த கவலை இல்லை. மொபைல் எஸ்எம்எஸ் மூலம் எளிதாக பணப் பரிவர்த்தனை செய்கிறோம். நுகர்வோரும் சரி, பொருளை விற்கும் வணிகர்களும் சரி, இதை முழுமையாக பின்பற்றுகிறார்கள். இதனால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை’’ என்றார்.

டிஜிட்டல் கிராமத் திட்டத்தின் மூலம் ஓராண்டுக்கு முன் தனியார் வங்கி ஒன்று மாநில அரசுடன் இணைந்து இந்த கிராமத்தை தத்தெடுத்ததே இந்த வளர்ச்சிக்கு காரணம். டிஜிட்டல் மயமாவதற்கு முன், இந்த கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் மோகன்பாய், தனது ஓய்வூதியத் தொகையை வங்கிக்கு நேரில் சென்று தான் எடுத்து வந்தாராம். அந்த வகையில் இரண்டு முறை அவரது பணம் வழிப்பறி செய்யப்பட்டதாம். ஆனால் டிஜிட்டல் மயமானதில் இருந்து அந்த பயமே இல்லையாம். டிஜிட்டலில் அசத்தும் இந்த அதிசய கிராமம் பெருநகரவாசிகளையும் பெருமூச்சு விட வைத்துள்ளது.

SCROLL FOR NEXT