இந்தியா

பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 2 பேர் பலி: கடுமையான பதிலடி கொடுத்ததாக அதிகாரிகள் தகவல்

பிடிஐ

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினரின் உதவியோடு தீவிர வாதிகள் நடத்திய ஊடுருவல் முயற்சியை ராணுவம் முறியடித்தது. எனினும், பாக். படையினரின் அத்துமீறிய துப்பாக்கிச் சூடு தாக்குதலில், ராணுவ வீரர்கள் இருவர் பலியாகினர். பெண் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.

காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ண காத்தி செக்டாரில் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே பாகிஸ்தான் படையினரின் அத்துமீறிய தாக்குதல் உதவியுடன் இருவேறு இடங்களில் நடந்த தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியை ராணுவத்தினர் முறியடித்தனர்.

ஊடுருவலை தடுத்து நிறுத்தியதோடு, பூஞ்ச் செக்டாரில் இருந்து ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்தது. இதில், பாகிஸ்தான் தரப்பில் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கும் என, ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் இந்த மோதலில், இந்திய வீரர்கள் 2 பேர் பலியாகினர். கிருஷ்ண காத்தி செக்டாரில் ஊடுருவல்காரர்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பஞ்சாபைச் சேர்ந்த சிப்பாய் குருசேவக் சிங் (23) பலியானார்.

பாகிஸ்தான் படையினரின் எல்லை தாண்டிய தாக்குதலுக்கு பூஞ்ச் செக்டாரில் மற்றொரு வீரர் பலியானார். இவரின் அடையாளத்தை ராணுவ அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை. அவரோடு, மேலும் 2 ராணுவ வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டது.

தவிர, பூஞ்ச் மாவட்டத்தில் பொதுமக்கள் குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்தும் பாகிஸ்தான் படையினர் ஷெல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில், பூஞ்ச் பகுதியில் வசிக்கும் சலீமா அக்தர் (28) என்ற பெண் காயமடைந்தார்.

பூஞ்ச் மாவட்டத்தில் மட்டும் நேற்று காலை 4 இடங்களில் பொதுமக்கள் குடியிருப்பு மற்றும் ராணுவ தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினர் ஷெல் குண்டுகளையும், சிறிய ரக பீரங்கிகளையும் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். இதற்கு தக்க பதிலடி கொடுத்ததாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஷ்மீர் நிலவரம்

இதற்கிடையே, நகரில் 16 வயது சிறுவன் மர்மமான முறையில் இறந்ததை அடுத்து, மீண்டும் கலவரச் சூழல் ஏற்பட்டுள்ளதால் நகரின் பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரில் மாயமான காய்சர் சோஃபி என்ற 16 வயது சிறுவன், 6 நாட்களுக்குப் பிறகு ஷாலிமர் பகுதியில் சுயநினைவற்ற நிலையில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டான்.

விஷம் கொடுத்து அச்சிறுவன் கொல்லப்பட்டதாக உள்ளூர்வாசி கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். எனினும், தற்கொலை முயற்சி வழக்கு பதிந்து நிஷாத் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT