நிலம் விற்று வீட்டில் ரூ.52 லட்சம் வைத்திருந்த பெண் ஒருவர், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைக் கேட்டு தற்கொலை செய்துகொண்டார்.
500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தார். இந்தப் பணத்தை வங்கியில் செலுத்த கால அவகாசமும் தரப்பட்டுள்ளது. ஆனால் இதைச் சரியாகப் புரிந்துகொள்ளாத, தெலங்கானா மாநிலத்தின் மகபூபாபாத் மாவட்டம், செனகபுரம் கிராமத்தைச் சேர்ந்த கந்துகூரி வினோதா (55) என்பவர் தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து மகபூபாபாத் போலீஸார் கூறியதாவது:
கந்துகூரி வினோதாவின் கணவருக்கு சிறிது நாட்களுக்கு முன், உடல்நலம் சரியில்லாமல் போனது. இதற்காக வினோதா தனக்கு சொந்தமான 12 ஏக்கர் விவசாய நிலத்தை ரூ.54.40 லட்சத்துக்கு சமீபத்தில் விற்றார். இதில் கணவரின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.2 லட்சம் மட்டும் செலவிட்டார். மற்ற பணத்தை இவர் வீட்டிலேயே வைத்திருந்தார். இந்நிலையில் பிரதமரின் அறிவிப்பை கேட்டு வினோதா அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தனது கணவர், மகனிடம் கூறி அழுதுள்ளார்.
இதற்கு கணவரும், மகனும் விவசாய நிலத்தை ஏன் விற்றாய்? என திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த வினோதா புதன்கிழமை இரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு போலீஸார் கூறினர்.
கணவரும், மகனும் விவசாய நிலத்தை ஏன் விற்றாய்? என திட்டியதாக கூறப்படுகிறது.