காணாமல்போன ஜேஎன்யு மாணவர் நஜீப் அகமதுவின் தாயார் பாத்திமா நபீஸ் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்தார்.
கடந்த அக்டோபர் 15-ம் தேதியிலிருந்து மாணவர் நஜீப் அகமதுவை காணவில்லை.
இந்நிலையில், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு நஜீப் அகமதுவின் தாயார் இன்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது மாணவர் நஜீபின் உறவினர்கள், அவரது சொந்த ஊரான மத்தியப் பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தின் எம்.பி. தர்மேந்திர யாதவ் ஆகியோர் உடனிருந்தனர்.
மாணவர் நஜீப் அகமதுவை கண்டுபிடிக்க டெல்லி போலீஸ் தனிப்படை அமைத்துள்ளதாகவும் தான் அந்த வழக்கின் முன்னேற்றத்தை தனிப்பட்ட முறையில் கவனித்து வருவதாகவும் ராஜ்நாத் சிங் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாதி கட்சி எம்.பி. தர்மேந்திர யாதவ்., "நஜீபின் தாயார் கூறியவற்றை உள்துறை அமைச்சர் பொறுமையாக கேட்டுக் கொண்டார். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். ஒருவேளை போலீஸார் நஜீப் அகமதுவை கண்டுபிடிக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகுவோம். இப்பிரச்சினையை நாடாளுமன்றத்திலும் எழுப்புவோம்" என்றார்.
நஜீபின் சகோதரி செய்தியாளர்களிடம் பேசும்போது, "என் சகோதரர் நன்றாக படிக்கக்கூடியவர். அவருக்கு மனநலன் சரியில்லை என்பதுபோன்ற தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி நாட்டின் உயரிய பல்கலைக்கழங்களில் ஒன்றான ஜே.என்.யு.வில் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றே அவர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார்" என்றார்.