இந்தியா

பொருளாதார அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார் மோடி: மாயாவதி குற்றச்சாட்டு

பிடிஐ

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி லக்னோவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: 500, 1000 ரூபாய் நோட்டுகளை முன்னறிவிப்பின்றி திடீரென திரும்பப்பெற்றதால், 95 சதவீத மக்கள் அதிருப்தி அடைந் துள்ளனர். நாட்டில் பொருளாதார அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளார் பிரதமர் மோடி.

இது மக்கள் நலனுக்கான முடிவு அல்ல. சுயலாபத்துக்காக மேற்கொள்ளப்பட்டது. முதலாளி வர்க்கத்துக்கும், தொழில் துறை யினருக்கும் வேண்டிய உதவிகளைச் செய்து, அதன் மூலம் தனது கட்சியைப் பொருளாதார ரீதியாக பலப்படுத்திக்கொண்ட பிறகு இந்த முடிவை மோடி எடுத்த தாக பேசிக்கொள்கின்றனர்.

அவசரகதியில் எடுக்கப்பட்ட இந்த முடிவால் செவ்வாய் கிழமை இரவு, பூகம்பம் ஏற்பட்டது போன்ற சூழல் நாட்டில் நிலவியது. மக்கள் சாலைகளிலும், பேருந்து நிலையங்களிலும், பெட்ரோல் நிலையங்களிலும் அவதிப்பட்டனர்.

மோடிக்கு கண்மூடித்தனமாக ஆதரவு அளிக்கும் பாஜக தலைவர் அமித் ஷா, இந்நடவடிக்கையை பொருளாதாரத் துறையில் மேற் கொள்ளும் துல்லியத் தாக்குதல் என வர்ணிக்கிறார். முதலாளி வர்க்கத்திடம் இருந்து மிதமிஞ்சிய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்துவிட்டார்களா என்ன? அப்படிச் செய்திருந்தால் அதனைப் பாராட்டலாம். இவ்வாறு மாயாவதி கூறினார்.

SCROLL FOR NEXT