மகாராஷ்டிரத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளில் மராத்தா வகுப்பினருக்கு 16 சதவீதமும் முஸ்லிம்களுக்கு 5 சதவீதமும் இடஒதுக்கிடு வழங்கி, அம்மாநில ஆளுநர் கே.சங்கரநாராயணன் சனிக்கிழமை அவசர சட்டம் பிறப்பித்தார்.
மராத்தா வகுப்பினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு வழங்குவது என அம்மாநில அமைச்சரவை கடந்த ஜூன் 26-ம் தேதி முடிவு செய்தது. இந்த முடிவை செயல்படுத்தும் வகையில் அவரச சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் வரும் அக்டோபரில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக ஆளும் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இம்முடிவை எடுத்துள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இக்கூட்டணி படு தோல்வி அடைந்தது.
மாநிலத்தின் 48 மக்களவை தொகுதிகளில் இவ்விரு கட்சிகளும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றன.
இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 21 சதவீத இடஒதுக்கீடு மூலம் மகாராஷ்டிரத்தில் மொத்த இடஒதுக்கீடு அளவு 73 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த 50 சதவீத உச்சவரம்பை காட்டிலும் மிக அதிகம். மாநில அரசின் இடஒதுக்கீடு முடிவுக்கு எதிரான பொதுநல வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் உள்ளது.