இந்தியா

அயோத்தியில் முதல்வர் யோகிக்கு கோயில் - சிலைக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு

செய்திப்பிரிவு

அயோத்தி: உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அந்த மாநிலத்தில் கோயில் கட்டி, சிலை வைத்து, ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த கோயிலில் அவருக்கு பஜனை கூட பாடுவது வழக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இது உலகறிந்த செய்தி. ஆனால், யோகி ஆதித்யநாத்துக்கு அதே அயோத்தியில் கோயில் கட்டப்பட்டுள்ளது. அயோத்தியில் இருந்து சரியாக 15 கிலோ மீட்டர் தொலைவில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. யோகியின் தீவிர தொண்டர் ஒருவர், அவர் மீது கொண்ட பக்தியின் காரணமாக இந்தக் கோயிலை கட்டியுள்ளதாகத் தெரிகிறது.

சினிமா நடிகர் மற்றும் நடிகையர்களுக்கு கடந்த காலங்களில் கோயில் கட்டிய செய்திகளை நாம் அறிந்திருப்போம். ஆனால், யோகிக்கு கட்டப்பட்டுள்ள கோயில் செய்தி வேறு ரகம்.

இந்தக் கோயிலை யோகியின் தொண்டர் பிரபாகர் மவுர்யா என்பவர் காட்டியுள்ளார். அயோத்தி - கோரக்பூர் நெடுஞ்சாலையில் பரத்குண்ட் எனும் இடத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தில்தான் பரதர், ராமரின் பாதுகையை வைத்து வழிபட்டதாக நம்பப்படுகிறதாம்.

ராமருக்கு கோயில் கட்டிக்கொண்டிருக்கும் யோகிக்கு மவுர்யா கோவில் கட்டியுள்ளதாக அந்த ஊரில் சொல்லப்பட்டு வருகிறதாம். “5.4 அடி உயரத்தில் பகவான் யோகியின் முழு உருவ சிலை இங்கு உள்ளது. பகவான் அணியின் அதே காவி உடைதான் இந்த சிலையும் அணிந்துள்ளது. 2014 முதல் நான் யோகியின் பக்தர். அவரை போற்றும் வகையில் பஜனை பாடல் எழுதி உள்ளேன். அதை ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் வெளியிட உள்ளேன்” என மவுர்யா தெரிவித்துள்ளார்.

யோகியின் சிலையை மவுர்யாவின் நண்பர் வடிவமைத்துக் கொடுத்துள்ளார். சுமார் 7 லட்ச ரூபாய் செலவில் இந்த மவுர்யா இந்தக் கோயிலை கட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு யூடியூப் தளத்தின் மூலம் கிடைத்த வருவாயை இதற்கு பயன்படுத்திக் கொண்டதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT