இந்தியா

விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.1,201 கோடி கடனை தள்ளுபடி செய்தது எஸ்பிஐ

செய்திப்பிரிவு

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மறுப்பு

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.1,201 கோடி கடனை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தள்ளுபடி செய்துள்ளது.

விஜய் மல்லையா உட்பட மொத்தம் 63 பேரின் கணக்குகளில் இருந்த வாராக் கடன் தொகை ரூ.7,016 கோடியை எஸ்பிஐ தள்ளுபடி செய்துள்ளது.

பணத்தை திருப்பிச் செலுத்த வசதியிருந்தும் செலுத்தாமல் உள்ள (வில்புல் டிபால்டர்) 100 பேரில் 63 பேரின் கடன் இவ்விதம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள 37-ல் 31 நபர்களின் நிலுவைத் தொகை பகுதியளவில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 6 பேர் செலுத்த வேண்டிய தொகை வசூலாகாத கடன் (என்பிஏ) கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத் துக்கு வழங்கிய ரூ.1,201 கோடியை தள்ளுபடி செய்துவிட்டதாக (write-off), வங்கியின் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிங்பிஷர் ஏர்லைன்ஸுக்கு வழங்கிய கடன் தொகை மோசமான கடன் (Bad loan) என்று பட்டியலிடப் பட்டு அது ஏயுசிஏ பிரிவில் சேர்க்கப் பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள் ளது.

பொதுவாக வங்கிகளில் கடன் பெற்று அதற்குரிய தவணை மற்றும் வட்டித் தொகையை 3 மாதங்களுக்கு செலுத்தாமல் போகும் கணக்குகள் அனைத்துமே 91-வது நாளன்று வசூலாகாத கடன் பிரிவில் சேரும்.

இதற்கு அடுத்த கட்டமாக கொடுத்த கடனை வசூலிப்பதற்கான நடவடிக்கையை நீதிமன்றம் மூலமாக வங்கி மேற்கொள்ளும். வழங்கிய கடன் போதிய அளவுக்கு திரும்பாது என்றால் அது துணை நிலை என்றும், திரும்புவது சந்தேகம் என்றால் அது சந்தேகம் என்ற பிரிவிலும், சொத்து திரும்பாது என்றால் அது சொத்து இழப்பு என்ற பிரிவிலும் சேர்க்கப்படும். அதேநேரம் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு நடைபெறும்.

வங்கிகள் தங்களது நிதிநிலை அறிக்கையில் வசூலாகாத கடன் அளவை பூஜ்ய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் இதற்கான கால வரம்பு 2017 மார்ச் என்றும் ஆர்பிஐ கெடு விதித்துள்ளது. இதனால் வங்கிகள் தங்களது லாபத் தொகையை குறைத்துக் கொண்டு வசூலாகாத கடனுக்கான ஒதுக்கீடுகளை அதிகரித்து வருகின்றன. இதனால் கடந்த மூன்று காலாண்டுகளாக பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளின் லாபம் குறைந்துள்ளது.

ஏயுசிஏ பிரிவுக்கு ஒரு கடன் தொகை செல்கிறது என்றால் அந்தக் கடன் திரும்பாது என்றோ வசூலிப்பதற்கான சாத்தியமற்றது என்றோ கருதப்படும் என்று எஸ்பிஐ வங்கியின் முன்னாள் தலைவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

கிங்பிஷர் ஏர்லைன்ஸுக்கு எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் வழங்கிய ரூ.6,000 கோடி கடனை திரும்பப் பெற கடுமையாகப் போராடி வருகின்றன. மேலும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனரான விஜய் மல்லையா கடந்த மார்ச் மாதமே லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்ந்த நிதி மோசடி வழக்குகள் மற்றும் நெருக்கடியிலிருந்து தப்பிக்க அவர் லண்டனில் வசித்து வருகிறார்.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத் துக்காக, கடனுக்கு ஈடாக வைக்கப்பட்ட மல்லையாவின் கோவா சொகுசு பங்களாவை விற்க எஸ்பிஐ மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை பயனளிக்கவில்லை.

பெரிய பண முதலைகள் தப்பிச் செல்ல அனுமதிக்கும் மத்திய அரசு, சாதாரண பொதுமக்களை 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து ரூபாய்க்கு தட்டுப்பாடான சூழலை உருவாக்கி வாட்டி வதைக் கிறது என்று எதிர்க்கட்சிகள் நாடாளு மன்றத்தில் கடுமையாகக் குற்றம் சாட்டின.

அருண் ஜேட்லி விளக்கம்

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி யினரின் கடும் அமளிக்கிடையே மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இதுகுறித்து கூறும்போது, “விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.1,201 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர் மீதான வழக்கை கைவிட்டுவிட்டதாக அர்த்தமல்ல. இந்தக் கடன் மோசமான கடன் என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது’’ என்றார்.

SCROLL FOR NEXT