இந்தியா

உத்தராகண்டில் நிலச்சரிவு: தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழுவினர்

செய்திப்பிரிவு

உத்தராகண்டில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேதார்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி, கங்கோத்ரி போன்ற புனித தலங்களுக்குச் செல்லும் வழி துண்டிக்கப்பட்டுள்ளது.

உத்தர்காசி, பித்தோர்கர், சமோலி, ருத்ரபிரயாக் போன்ற பகுதிகளில் நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதால் அப்பகுதியில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு உத்தராகண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கான யாத்திரீகர்கள் உள்பட பலர் பலியாகினர்.

இந்நிலையில், இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்தது முதலே தொடர்ந்து வானிலை முன் அறிவிப்பை வெளியிடுவது போன்ற பல்வேறு பணிகளை பேரிடர் மீட்புக் குழு செய்து வருகிறது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என எச்சரித்துள்ள பேரிடர் மீட்புக் குழு அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

மேலும் இமாலய மலையில் உள்ள புனிதத்தலங்களுக்கு பயணிக்க உள்ள யாத்ரீகர்களும் வானிலை முன் அறிவிப்பு, வெள்ளம், நிலச்சரிவு நிலவரங்களை அறிந்து கொண்டு பயணத்தை திட்டமிடுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT