ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து இன்று (திங்கள்கிழமை) நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் மேற்கொண்டுள்ளன.
இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்றுள்ளன. இடதுசாரிகள் சார்பில் 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் தொடங்கியது.
இந்தப் போராட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை. மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பண மதிப்பு நீக்கத்தை கடுமையாக எதிர்த்து வந்தாலும், இந்த முழு அடைப்புப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை.
அப்பாவி மக்கள்தான் கடுமையாக பாதிக்கப்படும் வகையிலான பண மதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து போராட்டம் நடத்தப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ஆனால், முழு அடைப்புப் போராட்டத்துக்கு தாங்கள் அழைப்பு விடுத்துள்ளதாக பாஜகவினர் தவறான தகவலை பொதுமக்கள் மத்தியில் பரப்பி வருவதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழக காங்கிரஸும் போராட்டக் களத்தில் உள்ளது.
மாநில வாரியாக நிலவரம்:
தமிழகம்:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. எனினும், மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பாதிப்பு இல்லை.
ஸ்டாலின் கைது
சென்னை ராஜாஜி சாலையில் திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசுக்கு எதிராக கண்டனக் குரல்களையும், முழக்கங்களையும் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஸ்டாலின், ''இந்தியா முழுவதும் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருவதாகவும், இது கட்சி சார்ந்த போராட்டம் இல்லை மக்களின் நலம் சார்ந்த போராட்டம்'' என்று கூறினார். இதையடுத்து ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
கேரளம்:
கேரளத்தில் இடதுசாரிகள் முழு அடைப்பு போராட்டத்தை காலை 6 மணிக்கு தொடங்கின. பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இயல்பு வாழ்க்கை ஓரளவு பாதிக்கப்பட்டாலும் கூட, அங்கு வங்கிகள், மருத்துவமனைகள், சுற்றுலா மையங்கள், சபரிமலை கோயில் மற்றும் திருமணங்கள் முதலானவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் எந்தப் பாதிப்பும் இல்லை.
மேற்கு வங்கம்:
முற்பகல் 11 மணி நிலவரப்படி, மேற்கு வங்கத்தின் இயல்பு வாழ்க்கையில் எந்தப் பாதிப்பும் இல்லை. அரசு மற்றும் தனியார் போக்குவரத்து வழக்கம்போல் இயங்குகின்றன. எனினும், இடதுசாரிகள் ஆதரவு உள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
"சில மாவட்டங்களில் சிற்சில போராட்டங்களைத் தவிர, மாநிலத்தில் மிகப் பெரிய அளவில் எந்த சம்பவமும் நடக்கவில்லை" என்று காவல் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிஹார்:
பாட்னா, ஜெஹனாபாத், கயா, போஜ்பூர் மற்றும் முஸாபர்நகர் ஆகிய இடங்களில் இடதுசாரிகள் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
ஆளும் ஐக்கிய ஜனதா தளம் இந்தப் போராட்டத்தை ஆதரிக்காத நிலையில், இரு கூட்டணி கட்சிகளான ராஷ்டிரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டக் களத்தில் உள்ளனர். சில இடங்களில் இயல்பு வாழ்க்கை ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளது.
எனினும், பள்ளிகளும் அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. இந்தப் போராட்டத்தை ஒட்டி பாட்னாவில் பாதுகாப்பு பணிகளுக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்:
குஜராத் முழுவதும் ஆம் ஆத்மி கட்சியின் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். எனினும், இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை.
ஆந்திரம்:
பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.
கர்நாடகம்:
கர்நாடகாவில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை. பள்ளிகளும் கல்லூரிகளும் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. அதேபோல் போக்குவரத்திலும் எந்த பாதிப்பும் இல்லை. கர்நாடகாவின் வடக்குப் பகுதியில் மட்டும் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி:
நெல்லித்தோப்பில் உள்ள ஹெச்டிஎஃப்சி வங்கி முன்பு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.
புதுச்சேரியில் இடதுசாரிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தபால் நிலையங்கள் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.