இந்தியா

அம்பரீஷ் மருத்துவ சிகிச்சைக்கு கர்நாடக அரசு ரூ.1 கோடி செலவு: மக்களின் வரிப்பணம் விரயம் என அரசியல் கட்சிகள் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

கன்னட நடிகரும் கர்நாடக மாநில வீட்டுவசதித் துறை அமைச்சருமான அம்பரீஷின் (62) மருத்துவ சிகிச் சைக்காக அம்மாநில‌ அரசு ரூ.1.16 கோடி செலவிட்ட விவகாரம் தற்போது பெரும்புயலைக் கிளப்பியுள்ளது. ஒரு தனிப்பட்ட அமைச்சருக்காக மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் செல‌வழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அம்பரீஷ் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி சிறுநீரகக் கோளாறு மற்றும் சுவாசக்கோளாறால் பாதிக்கப்பட்டு பெங்களூர் விக்ரம் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை யின் பேரில் கடந்த மார்ச் 1-ம் தேதி சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிச பெத் மருத்துவமனையில் அம்பரீஷ் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்ற அவர், குணமடைந்து மார்ச் 22-ம் தேதி மருத்துமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில், தனது சிகிச்சை செலவு கணக்கை அம்பரீஷ் அரசிடம் தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் மாநில அரசு 1 கோடியே 16 லட்சத்து 90 ஆயிரத்து 137 ரூபாயை அவருக்கு திரும்ப வழங்கியுள்ளது. இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அரசின் முடிவு

இதுகுறித்து கர்நாடக அரசு வியாழக்கிழமை விளக்கம் அளித் துள்ளது. அதில் “அமைச்சரவையின் சிறப்பு கவனத்தின் அடிப்படையில் அம்பரீஷுக்கு மருத்துவ செலவுக்கான நிதி வழங்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

இதற்கு ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒரு தனி மனிதருக்காக அரசு மக்களின் வரிப்பணத்தில் இவ்வளவு பணத்தை செலவழிப்பதா என கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

அரசுக்கு எதிராக எப்போதும் பிரச்சினையை கிளப்பும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், முன் னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோர் இந்த விவகாரம் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

வீணாகும் வரிப்பணம்

“1954-ல் உருவாக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை விதிகளின்படி, உள்நாட்டில் சிகிச்சைபெறும் ஒருவருக்கு அரசு ரூ.5 லட்சம் வரை வழங்கலாம். அமைச்சரவையின் ஒப்புதலுடன் சிறப்பு கவனத்தின் அடிப்படையில் ரூ.7 லட்சம் வரை நிதி ஒதுக்கலாம்.

ஆனால் சினிமாவில் நடித்து கோடிகோடியாய் சம்பாதித்து, அரசியலிலும் ஈடுபட்டு தற்போது அமைச்சராக இருக்கும் அம்பரீஷுக்கு ரூ.1.16 கோடி பணத்தை அரசு செலவிட்டு இருப்பதை ஏற்க முடியாது.

பெரும் செல்வந்தரான அம்பரீஷால் தனது மருத்துவ செலவை நிச்சயம் ஏற்க முடியும். ஆனால் ஏழை மக்களின் வரிப்பணத்தை அவருக்காக செலவழித்திருப்பதை ஜீரணிக்க முடியவில்லை” என அரசியல் விமர்சகர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT