அசாம் மாநிலத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் மூன்று பேர் பலியாகினர்.
இது தொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் சுனீட் நியூட்டன் கூறும்போது, "அசாம் மாநிலம் தின்சுகியா எனும் பகுதியில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 5.30 மணியளவில் பாதுகாப்புப் படையினர் வாகனத்தில் சென்றனர்.
அப்போது அவர்கள் செல்லும் வழியில் பதுக்கிவைத்திருந்த வெடிகுண்டை பதுங்கியிருந்த தீவிரவாதிகள் வெடிக்கச் செய்தனர்.
இதனையடுத்து வாகனத்தை நிறுத்திவிட்டு வீரர்கள் கீழே இறங்கியுள்ளனர். அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 3 வீரர்கள் பலியாகினர். தப்பியோடிய தீவிரவாதிகளை பிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது" என்றார்.
ராஜ்நாத் சிங் வருத்தம்:
தீவிரவாதிகள் தாக்குதலில் 3 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவாலிடம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விசாரித்தார். அசாமில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்காக வருந்துவதாகவும். அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் முதல்வரிடன் தெரிவித்துள்ளார்.