இந்தியா

செல்லாத ரூ.500, 1000 நோட்டுகளால் கோயில் உண்டியல் வருவாய் அதிகரிப்பு

ஐஏஎன்எஸ்

நாட்டில் ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர், கோயில்களின் உண்டியல் வருவாய் அதிகரித்துள்ளது. எனினும், பழைய நோட்டுகளை செலுத்த வேண்டாம் என்று பல கோயில்கள் உறுதியாக மறுத்துள்ளன.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதன்பிறகு நாடு முழுவதும் உள்ள கோயில் உண்டியல்களில் பழைய நோட்டுகள் கட்டுக்கட்டாக காணிக்கையாக குவிந்துள்ளன.

அத்தியாவசிய தேவைகளுக்கு பழைய நோட்டுகளை கொடுக்க மத்திய அரசு சில சலுகைகளை வழங்கி உள்ளது. ஆனால், மத ரீதியான வழிபாட்டு தலங்களுக்கு அதுபோல் எந்தச் சலுகையும் வழங்கப்படவில்லை. எனினும் கடந்த 15 நாட்களாக கோயில்களின் உண்டியல்களில் ஏராளமான 500, 1000 நோட்டுகள் தொடர்ந்து காணிக்கையாக குவிந்து வருகின்றன.

இதுகுறித்து மத்திய நிதிய மைச்சக அதிகாரிகள் கூறும்போது, ‘‘வங்கிகளில் கோயில்கள் டெபா சிட் செய்யும் உண்டியல் பணத் துக்கு வரி கிடையாது. அதற்கு (டெபாசிட்) அளவும் கிடையாது’’ என்றனர். எனினும் கோயில்களை நிர்வகிக்கும் அறக்கட்டளைகள் பக்தர்கள் நேரடியாக தரும் அன் பளிப்பு பணத்துக்கான கணக்கு களைச் சரியாக வைத்திருக்க வேண்டும் என்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கோயில் உண்டியல் வருவாய் மட்டும் இந்த நிதி ஆண்டில் ரூ.1000 கோடியாக (மொத்த வருவாய் ரூ.2,600 கோடி) இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த தொகை அதிகரிக்கும் என்று தெரிகிறது’’ என்றார்.

விஜயவாடாவில் உள்ள துர்கா கோயிலில் உண்டியல் வருவாய் ரூ.1 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தக் கோயில் நிர்வாக கமிட்டி கூறும்போது, ‘‘இந்த மாதம் இதுவரை ரூ.2.89 கோடி காணிக்கை வந்துள்ளது. சாதாரணமாக வசூலாவதை விட இந்த மாதம் ரூ.1 கோடி அதிகமாக காணிக்கை கிடைத்துள்ளது’’ என்றனர்.

சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலில், உண்டியல் காணிக்கை திடீரென 2 மடங்காகி உள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகி கூறும்போது, ‘‘சாதாரணமாக மாதம் ரூ.1 கோடி உண்டியலில் சேரும். 8-ம் தேதிக்குப் பிறகு 500, 1000 நோட்டுகள் கட்டுக் கட்டாக வந்துள்ளன. மொத்தம் இதுவரை ரூ.2 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

பழநி மலை முருகன் கோயில் நிர்வாகித்தினர் கூறும்போது, ‘‘உண்டியலில் சேரும் பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுவிடும். அதனால், 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பு ஒரு பிரச்சினையே இல்லை’’ என்றனர்.

எனினும், பிரபலமான சில கோயில்கள் பழைய நோட்டுகளை செலுத்த வேண்டாம் என்று பக்தர் களைக் கேட்டுக் கொண்டுள்ளன. இஸ்கான் தேசிய தகவல் இயக்கு நர் வி.என்.தாஸ் கூறுகையில், ‘‘அறக் கட்டளையின் கீழ் இஸ்கான் செயல் படுகிறது. உண்டியலில் பழைய நோட்டுகளை காணிக்கையாக செலுத்த பக்தர்களை நாங்கள் அனுமதிப்பதில்லை’’ என்றார்.

அதேபோல் ஷிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி, பஞ்சாபில் பொற்கோயில் உட்பட எல்லா குருத்வாராக்களிலும் கடந்த 10-ம் தேதிக்குப் பிறகு பழைய நோட்டுகளை ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘கேரளாவில் சபரிமலை கோயில் மிகப்பெரியது. இரண்டு மாதங்கள் நடக்கும் புனித யாத்திரை சீசன் கடந்த வாரம்தான் தொடங்கியது. இந்த காலக் கட்டத்தில் கோயில் வருவாய் அதிகரிக்கும். தற்போது 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளதால் கோயிலுக்குப் பெரிய பாதிப்பு ஏற்படும். இதுகுறித்து பிரதமர் மோடி, ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். எனினும் உண்டியல் வசூல் தொடரும்’’ என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘இந்த சீசன் ஜனவரி 3-வது வாரம் வரை நீடிக்கும். எனவே, பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள எங்களுக்கு அவகாசம் அளிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT