கோவாவில் 8 காங்கிரஸ் எம்எல்ஏகள் இன்று பாஜகவில் இணைந்தனர் 
இந்தியா

பாஜகவில் நாங்கள் இணைந்தது ஏன்? - கோவாவில் 8 காங். எம்எல்ஏக்கள் சார்பில் மைக்கேல் லோபோ விளக்கம்

செய்திப்பிரிவு

பனாஜி: மைக்கேல் லோபோ தலைமையில் கோவா முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் உள்ளிட்ட 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புதன்கிழமை பாஜகவில் இணைந்தனர். இதனால் 40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டப்பேரவையில் 11 ஆக இருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 3 ஆக குறைந்துள்ளது.

மைக்கேல் லோபோ தலைமையில் கோவாவின் முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் உட்பட 7 காங்கிரஸ் எம்எல்ஏகள் புதன்கிழமை காலையில், மாநில முதல்வர் பிரமோத் சாவந்த்தையும், சபாநாயகர் விதான் சபாவையும் சந்தித்தனர். அப்போது 8 எம்எல்ஏக்களும் பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர்கள் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர்.

பாஜகவுடனான இணைப்பிற்கு முன்னர் தன் சகாக்களுடன் செய்தியாளர்களை சந்தித்த மைக்கேல் லோபோ, "பிரதமர் மோடி, கோவா முதல்வர் பிரமோத் சாவந்தின் கரங்களை வலுப்படுத்துவதற்தாக பாஜகவில் இணைந்துள்ளோம்" என்று தெரித்தார். மேலும், “காங்கிரஸை விட்டு விலகி, பாஜகவில் இணையுங்கள்” என்று தாம் இருந்த கட்சியினருக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

கோவாவின் முன்னாள் முதல்வர் திகம்பர் காமத், மைக்கேல் லோபோ, டேலிலால் லோபோ (மைக்கேல் லோபோவின் மனைவி) ராஜேஷ் பல்தேசாய், கேதார் நாயக், சங்கல்ப் அமோகர், அலெக்ஸா செக்வேரா, ரூடால்ஃப் பெர்னாண்டஸ் ஆகியோர் புதன்கிழமை பாஜகவில் இணைந்தனர்.

இந்தியாவை ஒன்றிணைப்பதற்காக 3,500 கி.மீ காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் தொடங்கி உள்ள நிலையில், கோவா காங்கிரஸில் ஏற்பட்டுள்ள பிளவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT