புதுடெல்லி: எல்லையில் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டுள்ள 1000 சதுர கிலோ மீட்டரை இந்திய அரசு எப்படி மீட்கும் என்று தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "சண்டையே இல்லாமல் சீனாவுக்கு 1000 சதுர கிலோ மீட்டரை இந்திய மண்ணை தாரை வார்த்துக் கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. ஏப்ரல் 2020-க்கு முன்னர் இருந்த நிலவரப்படி எல்லையை வரையறுக்க சீனா ஒப்புக் கொள்ளவில்லை. இந்திய அரசாங்கம், இந்த 1000 சதுர கிலோ மீட்டர் எப்படி மீட்டெடுக்கப்படும் என்று தெரிவித்தால் நலம்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று இந்தியா, சீனப் படைகள் கிழக்கு லடாக் பகுதியில் கோக்ரா ஹைட்ஸ் எனும் பகுதியில் பேட்ரோலிங் பாயின்ட் 15-ல் இருந்து தத்தம் படைகளைத் திரும்பப் பெற்றன. இதை பெரிய முன்னேற்றமாக மத்திய அரசும் பாஜகவும் கூறிவரும் நிலையில், ராகுல் காந்தி இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூனில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப் பெரிய மோதல் ஏற்பட்டது. இந்திய தரப்பில் 20 வீரர்களும் சீன தரப்பில் 40 வீரர்களும் உயிரிழந்தனர். இதன்காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் எழுந்தது. பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு லடாக்கின் பல்வேறு முனைகளில் படைகள் வாபஸ் பெறப்பட்டன. எனினும் லடாக்கின் கோக்ரா- ஹாட்ஸ்பிரிங் எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் வீரர்களும் முகாமிட்டிருந்தனர்.
இந்தச் சூழலில் கடந்த 2-ம் தேதி இந்தியா, சீனா இடையே நடைபெற்ற ராணுவ கமாண்டர்கள் பேச்சுவார்த்தையில் கோக்ரா- ஹாட்ஸ்பிரிங் பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெற ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதன்படி செப்.12-க்குள் இந்திய, சீன படை வீரர்கள் வாபஸ் பெறப்பட்டு பழைய நிலைக்கு திரும்புவார்கள் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையிலேயே நேற்று படைகள் வாபஸ் பெறப்பட்டன. இருப்பினும் வாபஸ் பெறப்பட்ட பகுதியைவிட ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியே அதிகம் என்று சுட்டிக்காட்டி ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.