ரியாசி: உலகின் மிக உயரமான ரயில் பாலம் என அறியப்படும் செனாப் பாலத்தின் பிரமிப்பூட்டும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது இந்திய ரயில்வே. மேகங்கள் புடை சூழ வேற்றுலகில் பயணிக்கும் அனுபவத்தை இந்த பாலத்தில் பயணிக்கும் ரயில் பயணிகள் அனுபவிப்பார்கள் எனத் தெரிகிறது. பொறியியலின் அற்புதம் என சமூக வலைதளப் பயனர் ஒருவர் இந்தப் பாலத்தின் கட்டுமான பணியை பார்த்து கமென்ட் செய்துள்ளார்.
உதம்பூர்-ஸ்ரீநகர்-பாராமுல்லா ரயில் இணைப்பின் முக்கிய மைல்கல்லாக இந்த பாலம் அமைந்துள்ளது. செனாப் நதியின் மீது இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. 1315 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலத்தின் கட்டுமான பணியை மேற்கொண்ட ஊழியர்கள் மழை, குளிர் என சவாலான வானிலை சூழலை எதிர்கொண்டுள்ளனர்.
செனாப் பாலம் ஆற்றுப் படுகையின் மட்டத்திலிருந்து சுமார் 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபிள் டவரை காட்டிலும் சுமார் 35 மீட்டர் உயரம் என தெரிகிறது. ஸ்டீல் மற்றும் கான்கிரீட் வளைவு பாலம். இந்தப் பாலத்தின் கட்டுமான பணிக்கு டெக்லா எனும் தொழில்நுட்பத்தை ரயில்வே பயன்படுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை இந்தப் பாலத்தின் ஸ்டீல் தாங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் தளத்தில் மொத்தம் நான்கு படங்களை பகிர்ந்துள்ளது இந்திய ரயில்வே. அந்த நான்குமே சினிமா காட்சிகளில் வருவதை போல கவித்துவமாக உள்ளன. மேக கூட்டங்களுக்கு நடுவில், சூரிய ஒளியை பின்புலமாக கொண்டு என அந்தப் படங்கள் உள்ளன.