நாடு முழுவதும் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் காலாவதியாகி உள்ள நிலையில், கர்நாடகாவில் முன்னாள் பாஜக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மகள் திருமணம் ரூ.500 கோடி செலவில் ஆடம்பரமாக நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து உரிய விசாரணை நடத்தும்படி சமூக சேவகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கர்நாடக முன்னாள் பாஜக அமைச்சரும், சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டி மகள் பிராமணிக்கும், ஆந்திராவைச் சேர்ந்த சுரங்க அதிபர் ராஜீவ் ரெட்டிக்கும் வரும் 16-ம் தேதி பெங்களூரு அரண்மனையில் திருமணம் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ் எல்சிடி வடிவில் ஆடம்பரமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
பெட்டி வடிவிலான அழைப்பி தழைத் திறந்தால் எல்சிடி திரை யில் ஜனார்த்தனரெட்டி, அவரின் மனைவி, மகன், மற்றும் மணப் பெண், மணமகன் ஆகியோர் பங் கேற்கும் பாடல் காட்சி இடம் பெற்றுள்ளது. சரியாக 2 நிமிடம் 28 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ அழைப்பிதழ் ரூ.2.25 கோடி செலவில் தயாரிக்கப்பட் டுள்ளது.
இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக பெங்களூரு அரண்மனை மைதானத்தில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு வருகிறது. கோயில் செட், விஐபி மேடை, பிரத்யேக குடில்கள் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திருமணத்தில் முக்கிய அரசியல் தலைவர்களும், திரைப்பட நடிகர்களும், தொழிலதிபர்களும் பங்கேற்க உள்ளனர். எனவே, ஜனார்த்தன ரெட்டி திருமணத்துக்காக ரூ.500 கோடிக்கும் அதிகமாக செலவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பெங்களூரு சமூக சேவகர்கள், ‘‘சுரங்க மோசடி வழக்கில் சிக்கிய ஜனார்த்தன ரெட்டியின் வங்கி கணக்குகள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே முடக்கப்பட்டது. தற்போது ஜாமீனில் வெளியே வந்த ஜனார்த்தன ரெட்டி மகளின் திருமணத்துக்குப் பல நூறு கோடி ரூபாயை செலவு செய்து வருகிறார். இதற்கான பணம் எங்கிருந்து வந்தது?
தவிர நாடு முழுவதும் பணப் புழக்கம் அறவே கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கே தினசரி வங்கி கள் முன்பாக பொதுமக்கள் காத்து கிடக்கும் நிலை ஏற்பட் டுள்ளது.
இத்தகைய சூழலில் ஜனார்த்தன ரெட்டியால் மட்டும் எப்படி பல கோடி ரூபாயை எளிதாக புரட்ட முடிந்தது. இது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே மத்திய, மாநில அரசுகளும், வருமான வரித் துறையினரும் இந்தத் திருமணம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்த வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத் துள்ளனர்.