இந்தியா

உ.பி.யில் நடந்த சமாஜ்வாதியின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் அகிலேஷ் மீது சரமாரி குற்றச்சாட்டு: ஷிவ்பால் யாதவின் பேச்சால் மீண்டும் சர்ச்சை

பிடிஐ

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்குள் நிலவும் வாரிசு அரசியல் மோதலை நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், கட்சியின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் முதல்வர் அகிலேஷ் மீது அவரது சித்தப்பா ஷிவ்பால் யாதவ் சரமாரி குற்றம்சாட்டி பேசியதால் மீண்டும் மோதல் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ் வாதி கட்சியின் தேசிய தலைவரான முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். அவரது பதவியை பறிக்க சித்தப்பா ஷிவ்பால் யாதவ் முயற்சித்ததாக சர்ச்சை எழுந்தது.

இருவருக்கும் இடையிலான மோதல் வலுத்து வந்த நிலையில் முலாயம் சிங் குறுக்கிட்டு சமா தானப்படுத்தும் முயற்சியில் ஈடு பட்டார். இதைத் தொடர்ந்து சமாஜ் வாதி கட்சிக்குள் எழுந்த வாரிசு அரசியல் மோதலுக்கு தற்காலிக மாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கட்சியின் வெள்ளிவிழா நிகழ்ச்சி லக்னோவில் நேற்று நடந்தது. அப்போது மேடையில் அமர்ந்திருந்த அகிலேஷ் யாதவ், கட்சிக்குள் ஒற்றுமை இருப்பதை காண்பிக்கும் வகையில், சித்தப்பா ஷிவ்பால் யாதவ்வுடன் அவ்வப்போது பேசினார். மேலும் அவரது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். பதிலுக்கு ஷிவ்பால் யாதவும் பூசலை மறந்து வாழ்த்தினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஷிவ்பால் யாதவ், கட்சிக்காக எந்தத் தியாகமும் செய்யாதவர்கள் உயர் பதவியில் அமர்ந்துவிடுகின்றனர் என அகிலேஷ் யாதவை தாக்கினார். மேலும் அவர் பேசியதாவது:

நான் முதல்வர் பதவிக்கு ஆசைப் படவில்லை. இருந்தபோதும் அகிலேஷ் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி என்னை அவமதித்து விட்டார். அப்படி இருந்தும் கட்சிக் காக எனது ரத்தத்தை தொடர்ந்து சிந்தி வருகிறேன். முதல்வர் அகிலேஷுக்கு ஒரு விஷயத்தை தெளிவாக்க விரும்புகிறேன். என்னிடம் இருந்து என்ன தியா கத்தை எதிர்பார்த்தாலும் அதை நிச்சயம் வழங்குவேன். ஒருபோதும் முதல்வராக நான் ஆசைப்பட்டதில்லை. முதல்வராக அகிலேஷ் யாதவ் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். அவரைப் போல் கடந்த 4 ஆண்டுகளில் எனது துறைச் சார்ந்த பணிகளை சிறப்பாக முடித்திருக்கிறேன். ஒரு சிலர் விதி காரணமாக பதவியில் அமர்ந்து விடுகின்றனர். ஒரு சிலர் அரும்பாடுபட்டாலும் எந்தப் பதவிக்கும் உயர முடியவில்லை. தியாகம் செய்பவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஷிவ்பால் யாதவின் இந்த பகிரங்கப் பேச்சால் சமாஜ்வாதி கட்சிக்குள் ஓய்ந்திருந்த மோதல் மீண்டும் பெரிதாகியுள்ளது.அகிலேஷ் யாதவ் பேசும்போது, ‘‘ஒரு சில விவகாரங்களுக்கு நான் எந்த பதிலும் தெரிவிக்கப் போவ தில்லை. என்னை சோதிக்க விரும்பி னால், அதை ஏற்க தயாராகவே இருக்கிறேன்’’ என்றார்.

SCROLL FOR NEXT