ஹைதராபாத் - மியாபூர் பகுதியில் 16 வயது பள்ளி மாணவி ஒருவர் தீயிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மியாபூர் பகுதியில் அமைந்துள்ள சைதன்யா ஜூனியர் காலேஜ் பள்ளியில் படித்து வந்தவர் சாத்விகா (16). இவர் செவ்வாய்க்கிழமை இரவு தான் தங்கியிருந்த விடுதி அறையில் வாசனை திரவியத்தை தன் மீதும், அருகிலிருந்த படுக்கையின் மீதும் தெளிந்து தீயிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பு தெரிவித்தது. இவர், தெலங்கானா மாநிலம் நிசாபாத் பகுதியைச் சேர்ந்தவர்.
இந்தத் தற்கொலை குறித்து போலீஸ் தரப்பில் மேலும் கூறும்போது, "சாத்விகா தங்கியிருந்த விடுதி அறையில் இருந்து தீ வெளிவருவதைக் கண்ட விடுதி பாதுகாப்பாளர் சத்தமிட்டு ஆட்களை அழைத்துள்ளார். அந்த அறையில் எந்த ஒரு தற்கொலை குறிப்பும் கண்டறியப்படவில்லை.
சாத்விகா கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் தசரா பண்டிகைக்காக சொந்த ஊர் வந்துள்ளார். அவருக்கு கல்லூரியில் இருக்க பிடிக்காத காரணத்தால் இந்தத் துயர முடிவை எடுத்திருக்கிறார் என்று அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்" என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த 16 வயது பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.