இந்தியா

பிரதமர் உருவபொம்மை எரிப்பு: விசாரணைக்கு ஜே.என்.யு. உத்தரவு

பிடிஐ

ஜே.என்.யு. வளாகத்தினுள் பிரதமர் மோடி உருவபொம்மையை எரித்தது தொடர்பாக பல்கலைக் கழக நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரை ராவணன் போல் சித்தரித்து அவர்களது உருவபொம்மையை எரித்த சம்பவம் குறித்து ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக துணைவேந்தர் ஜகதேஷ் குமார் கூறும்போது, “உருவபொம்மை எரிப்பு சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம், மேலும் அது குறித்து ஆராய்ந்து வருகிறோம்” என்றார். உருவபொம்மை எரிப்பில் இவரது உருவபொம்மையும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒருவாரத்திற்கு முன்பு குஜராத் அரசு மற்றும் பசுப்பாதுகாப்பு கண்காணிப்பாளர்கள் உருவபொம்மைகளை மாணவர்கள் சிலர் எரித்த சம்பவம் குறித்த விசாரணை உத்தரவுக்குப் பிறகு தற்போது இந்த விவகாரம் கிளம்பியுள்ளது.

தசரா பண்டிகையன்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், தீவிரவாதி ஹபீஸ் சயீத் மற்றும் பிற தீவிரவாத அமைப்புகளின் உருவபொம்மைகள் எரிப்பு நாட்டின் சில பகுதிகளில் நடந்தேறியது. இந்நிலையில் காங்கிரஸ் சார்பு இந்திய தேசிய மாணவர்கள் சங்கம் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோரை ராவணனாக சித்தரித்து உருவபொம்மை எரிப்பு சம்பவம் செவ்வாயன்று நடந்துள்ளது.

அதாவது மத்திய அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மீது மத்திய அரசின் தாக்குதல் போக்கு தொடர்கிறது என்றும் கூறி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக ஆர்பாட்டக்காரர்கள் கூறினர்.

உருவபொம்மை எரிப்பு தொடர்பாக பல்கலைக் கழகத்தின் அனுமதி பெறவில்லை என்று நிர்வாகம் கூற, உருவபொம்மை எரித்த மாணவர் அமைப்போ பல்கலைக் கழக வளாகத்திற்குள் இது வழக்கமான சம்பவமே என்று கூறுகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மட்டுமல்லாது, பாபா ராம்தேவ், சாத்வி பிராக்யா, நாதுராம் கோட்சே, அசாரம் பாபு மற்றும் துணை வேந்தர் ஆகியோரது உருவபொம்மைகளும் எரிக்கப்பட்டதோடு, “தீமைக்கு எதிராக உண்மை எப்போதும் வெல்லும்” என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் மாணவர்கள் காட்டியதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT