பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த சதியில் ஜோத்பூரைச் சேர்ந்த விசா ஏஜென்ட்டை போலீஸார் நேற்று கைது செய்தனர். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக விசா பிரிவு அதிகாரி மெகமூத் அக்தர், இந்தியாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
அவருக்கு உடந்தையாக இருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த மதரசா பள்ளி ஆசிரியர் மவுலானா ரம்ஸான், சுபாஷ் ஜாங்கீர் ஆகிய 2 பேரை டெல்லி போலீஸார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.இந்த சதியில் சம்பந்தப்பட்ட ஜோத்பூரைச் சேர்ந்த பாஸ்போர்ட், விசா ஏஜென்ட் சோயிப் என்பவரைப் போலீஸார் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
ஜோத்பூரில் பதுங்கி இருந்த சோயிப்பை உள்ளூர் போலீஸார் வியாழக்கிழமை மாலை கைது செய்தனர். அங்கிருந்து அவரை டெல்லிக்கு அழைத்து வந்துள்ளோம். விசாரணையில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி சொன்னபடி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்து
ராணுவ தகவல்களை அளிக்க மவுலானா ரம்ஸான், சுபாஷ் ஜாங்கீர் ஆகியோரை சோயிப்தான் தேர்வு செய்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் மவுலானாவை சந்தித்து ராணுவம் தொடர்பான முக்கிய தகவல்களை திரட்டி தரும்படி சோயிப் கூறியுள்ளார். சோயிப்பின் குடும்பத்தினர் ஜோத்பூரில் ஜவுளிக்கடை நடத்தி வருகின்றனர்.
6 முறை பாக். பயணம்மேலும், பாகிஸ்தானில் சோயிப்பின் தாத்தா, பாட்டி, உறவினர்கள் வசிக்கின்றனர். அவர்களை பார்க்க செல்வது போல் 6 முறை பாகிஸ்தான் சென்று வந்துள்ளார். ஆனால், பாகிஸ்தான் தூதரக அதிகாரி மெகமூத் அக்தருடன் அவருக்கு மூன்று நான்கு ஆண்டுகளாக தொடர்பு இருந்திருக்கிறது.
டெல்லியில் அக்தரிடம் ராணுவ ரகசிய ஆவணங்களை கொடுக்க மவுலானாவும், ஜாங்கீரும் சென்றபோது, சோயிப்பும் அங்கு இருந்திருக்கிறார். அவர் ஓட்டலில் தங்கிவிட்டதாகவும் மற்ற 2 பேர் மட்டும் அக்தரை சந்திக்க சென்றதாகவும் விசாரணையின் போது கூறியுள்ளார். விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல்களை உறுதி செய்ய மவுலானா, ஜாங்கீர், சோயிப் ஆகிய 3 பேரையும் ஒன்றாக வைத்து விசாரிக்க உள்ளோம்.
அதில் பல உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கிறோம்.அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இதில் பாகிஸ்தான் உளவு பார்த்த சதி திட்டத்தில் வேறு யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற விவரம் வெளியாகும்.
இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.