பெங்களூரு: பெங்களூருவில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒயிட் ஃபீல்ட், மாரத்தஹள்ளி, மகாதேவ புரா, எமலூர், பெல்லந்தூர் உட்பட 70-க்கும் மேற்பட்ட பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், ஆடம்பர பங்களா, வில்லா ஆகியவற்றுக்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் படகு, டிராக்டர் மூலம் மீட்கப்பட்ட மக்கள் தனியார் விடுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். விடுதிகள் நிரம்பி வழிவதால், கட்டணமும் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் 5-வது நாளாக நேற்றும் முழுமையாக வடியவில்லை. எனவே பெங்களூரு மாநகராட்சி ஊழியர்கள் குடியிருப்புகளை சூழ்ந்த நீரை மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர் போதிய வடிகால் வசதி இல்லாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் இருப்பதால் வெள்ளத்தை வடிய வைப்பதில் மாநகராட்சி பணியாளர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். சில இடங்களில் மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கினர். அங்கு ஆன்லைன் உணவு விநியோகம் முற்றிலுமாக தடைப்பட்டுள்ளதால் கோடீஸ்வரர்களும் ஒருவேளை உணவுக்கே அல்லாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஐடி நிறுவனங்கள் பாதிப்பு: பெங்களூருவில் பெய்துவரும் மழை மற்றும் வெள்ளத்தால் ஒயிட் ஃபீல்ட், மாரத்தஹள்ளி, மகாதேவபுரா, வெளிவட்ட சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவன வளாகங்களிலும் வெள்ளம் புகுந்துள்ளது. ஊழியர்கள் பணிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. மின்சாரமும், குடிநீர் விநியோகமும் துண்டிக்கப்பட்டதால் இந்த நிறுவனங்கள் முடங்கியுள்ளன. இதனால் ஐடி நிறுவனங்களுக்கு ரூ.500 கோடிக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எழுதிய கடிதத்தில், ‘‘பெங்களூருவின் வருமானத்தில் 32 சதவீத தொகை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம் கிடைக்கிறது. ஆனால் சாலை வசதி, குடிநீர், மின்சாரம், போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாடு, வெள்ள அபாய தடுப்பு ஆகிய பணிகளை அரசு மேற்கொள்வதில்லை. இந்த சூழலை சரி செய்யாவிடில் நாங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர வேண்டியிருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஐடி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து, 6 மாதங்களுக்குள் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வத் நாராயணன் நேற்று உறுதி அளித்தார்.