சூரத்: உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது சாதாரணமான சாதனை அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் சூரத் நகரிலுள்ள ஓல்பாட் பகுதியில் நடைபெற்ற மிகப்பெரிய மருத்துவ முகாமை, காணொலி முறையில் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் குஜராத் மாநில அரசின் பல்வேறு நலத்திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விழாவில் அவர் காணொலி மூலம் பேசியதாவது:
காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற 75-வது அமிர்த பெருவிழா ஆண்டில் இந்தியா, பிரிட்டனை விஞ்சி உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. இந்த முன்னேற்றம் சாதாரணமான சாதனை அல்ல. இதற்காக ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும்.
இதனை அப்படியே விட்டுவிடக் கூடாது. இந்த உற்சாகத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். மேலும் முன்னேற வேண்டும். இந்தியா தற்போதுதான் பிரிட்டனை முந்தியுள்ளது.
உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனிக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. உலகின் 5-வதுபெரிய பொருளாதார நாடு என்றசாதனை நாம் மேலும் கடினமாக உழைக்கவும், பெரிய இலக்குகளை அடையவும் நம்பிக்கை அளித்துள்ளது.
இயற்கை விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட வேண்டும். இதன்மூலம் குறைந்த செலவில் அதிக மகசூலைப் பெற முடியும். குஜராத்திலும், மத்தியிலும் பாஜக ஆட்சியே நடக்கிறது. இந்த இரட்டை இன்ஜின் அரசால் நாம் மேலும் பல சாதனைகளைப் படைக்க முடியும்.
3 கோடி வீடுகள்
ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் மூலம் கடந்த 8 ஆண்டுகளில் 3 கோடி வீடுகள் நாடு முழுவதும் மத்திய அரசால் கட்டித் தரப்பட்டுள்ளன. இதில் குஜராத்தில் மட்டும் 10 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
குஜராத் மாநிலத்தில் சுகாதாரக் கட்டமைப்பு சிறப்பாக அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் அமைந்துள்ளன. இவை உலகத் தரத்திலான சிகிச்சையை குஜராத் மாநில மக்களுக்கு அளிக்கின்றன.
குஜராத்தில் கடந்த 20 ஆண்டுகளில் 11 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 31 ஆக உயர்ந்துள்ளது. விரைவில் ராஜ்கோட் நகரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. அதுமட்டுமல்லாமல் மேலும்சில புதிய மருத்துவக் கல்லூரிகளும் குஜராத்தில் அமையவுள்ளன.
இங்கு தற்போது மிகப்பெரிய அளவிலான மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவ முகாமுக்கு வரும் பொதுமக்களிடம் டாக்டர்கள் அவர்களது வாழ்க்கை முறை குறித்து விசாரிக்க வேண்டும். சத்தான உணவுகளின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்க வேண்டும். இதன்மூலம் நோயில்லாத வாழ்க்கையை வாழ முடியும் என்பதை அவர்களிடம் டாக்டர்கள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, கணவனை இழந்த பெண்களுக்கு பென்ஷன், பிரதமரின் கிசான் சம்மான் நிதி, உஜ்வாலா திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற திட்டப் பயனாளிகளுடன் காணொலி வசதி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.