காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினர்கள் குழுவின் துணைத் தலைவராக பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்கும், கட்சியின் தலைமை கொறடாவாக ஜோதிர் ஆதித்ய சிந்தியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கேவும் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அமரிந்தர் சிங்கும் பழுத்த அனுபவசாலிகள்.
மத்தியப் பிரதேசத்திலிருந்து தேர்வான கட்சியின் 2 எம்பிக்களில் ஒருவரான சிந்தியாவை தலைமை கொறடாவாக நியமித்துள்ளது அவையில் திறமையாக வாதிடும் இளைய தலைவர் தேவை என்கிற கட்சியின் நோக்கத்தை பிரதிபலிக்கிறது. கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர் சிந்தியா. மத்தியப் பிரதேசத்திலிருந்து தேர்வான காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்பி கமல்நாத்.
மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவராக கமல்நாத் நியமிக்கப்படுவார் என பேச்சு அடிபட்டுவந்த நிலையில் திடீர் திருப்பமாக அந்த பதவி கர்நாடகத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கிடைத்தது.
ஹரியாணாவிலிருந்து தேர்வான ஒரே ஒரு கட்சி எம்.பி.யும் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் மகனுமான தீபேந்தர் சிங் கொறடாக்களாக நியமிக்கப்பட்டுள்ள இருவரில் ஒருவராவார். மற்றொரு கொறடா கேரளத்தைச் சேர்ந்த கே.சி.வேணுகோபால் ஆவார்.
இந்த நியமனங்கள் பற்றிய அறிவிப்பை கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஷோபா ஓயா வியாழக்கிழமை வெளியிட்டார்.
மாநிலங்களவை காங்கிரஸ் கட்சித் தலைவராக ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.