புதுடெல்லி: லடாக்கின் கோக்ரா - ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து படைகளை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை இந்தியாவும் சீனாவும் தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லடாக் யூனியன் பிரதேசத்தை ஒட்டிய எல்லையில் இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து கடந்த 2020 மே மாதம் முதல் அங்கு இரு நாடுகளும் படைகளை குவிக்கத் தொடங்கின. இரு தரப்பிலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகின. இதனால், அங்கு பதற்றம் அதிகரித்து எப்போது வேண்டுமானாலும் நிலைமை மோசமடையலாம் என்ற நிலை காணப்பட்டது. எனினும், பதற்றத்திற்கு இடையே இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
கார்ப்ஸ் கமாண்டர் மட்டத்தில் நடத்தப்பட்ட 16-ஆவது சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு, அதன்படி லடாக்கின் கோக்ரா - ஹாட்ஸ்பிரிங்ஸ் (Patrolling Point-15) பகுதியில் உள்ள படைகளை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் இன்று முதல் தொடங்கி உள்ளதாக இரு தரப்பும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட முறையில் படைகள் திரும்பத் தொடங்கி உள்ளதாகவும், இதன்மூலம் எல்லைப் பகுதியில் அமைதி நிலவ வழி ஏற்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
படைகள் முழுமையாக விலகிய பிறகு, அங்கு மீண்டும் மோதல் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், புதிய ரோந்து விதிமுறைகள் உருவாக்கப்பட்டு கடைப்பிடிக்கப்படும் என்றும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னேற்றத்தை அடுத்து, கால்வான் பள்ளத்தாக்கில் உள்ள டெம்சோக் மற்றும் டெப்சாங் பகுதியில் இருந்தும் படைகளை திரும்பப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் என ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லடாக்கின் அனைத்து பகுதிகளில் இருந்தும் முழுமையான படை விலகலை சாத்தியப்படுத்த அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு உஸ்பெகிஸ்தானில் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கலந்து கொள்ள உள்ளனர். இரு தலைவர்களும் சந்திக்க உள்ள நிலையில், லடாக் எல்லையின் ஒரு பகுதியில் இருந்து படைகளை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை தொடங்கி இருப்பது இரு நாட்டு உறவில் நல்ல திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.