மும்பை: ஊழியர்களின் தொலைபேசியை ஓட்டுக்கேட்ட வழக்கில் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ரவி நாராயணை அமலாக்கத் துறைஅதிகாரிகள் கைது செய்தனர்.
பங்குச் சந்தை வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் 2010-ம் ஆண்டு தேசிய பங்குச் சந்தை நிறுவனம் (என்எஸ்இ), கோ-லொக் கேஷன் வசதியை அறிமுகம் செய்தது. இந்தக் கட்டமைப்பை முறைகேடாக பயன்படுத்தி சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு பங்குச் சந்தை தொடர்பான விவரங்களை முன்னதாக வழங்கியதாக 2015-ம் ஆண்டு என்எஸ்இ மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து என்எஸ்இ விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த வழக்குத் தொடர்பாக, 2013 - 2016 வரையில் என்சிஇ-யின் சிஇஓ-வாக பொறுப்புவகித்த சித்ரா ராமகிருஷ்ணாவையும், என்எஸ்இ-யின் முன்னாள் குழுமசெயல்பாட்டு அதிகாரி ஆனந்த் சுப்ரமணியனையும் சில மாதங்களுக்கு முன்பு சிபிஐ கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. விசாரணையில், சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் அவருக்கு முன்னதாக என்எஸ்இ-யின் சிஇஓ-வாகபொறுப்புவகித்த ரவி நாராயண் ஆகியோர் 2009 - 2017 கால கட்டத்தில் நிறுவனத்தில் வேலை செய்த சில நபர்களின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டது தெரிய வந்தது. இந்தக் ஒட்டுக்கேட்பில் மும்பை முன்னாள் காவல் ஆணையர் சஞ்சய் பாண்டேவுக்கு முக்கியப் பங்கு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதையடுத்து கடந்த ஜூலை மாதம் பாண்டே கைது செய்யப் பட்டார். அதேபோல், சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சித்ரா ராமகிருஷ்ணாவையும் அம லாக்கத் துறை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றது.
இந்நிலையில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் ரவி நாராய ணும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். 1994-ம் ஆண்டு என்எஸ்இ செயல்பாட்டுக்கு வந்தபோது அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், நிர்வாக இயக்குநராகவும் ரவி நாராயண் நியமிக்கப்பட்டார். 2013-ம் ஆண்டு வரை அவர் என்எஸ்இ-யின் சிஇஓ-வாக தொடர்ந்தார். என்எஸ்இ தொடர்பான முறைகேடு வழக்குகளில் ரவி நாராயண் இப்போதுதான் முதன்முறையாக கைது செய்யப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.