தானே மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் இயங்கி வந்த ஹரி ஓம் ஐடி பார்க், யூனிவர்சல் அவுட்சோர்சிங் சர்வீசஸ் மற்றும் ஒஸ்வால் ஹவுஸ் என்ற மூன்று போலி கால் சென்டர்களை அண்மையில் போலீஸார் கண்டுபிடித்தனர். இந்த கால் சென்டர் நிறுவனங்கள் அமெரிக்காவில் வசிக்கும் பெரும் பணக்காரர்களை குறிவைத்து பலகோடி பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளன. அமெரிக்க வருமான வரித் துறை அதிகாரிகளைப் போல அமெரிக்க பணக்காரர்களிடம் தொலைபேசி மூலம் பேசி நாளொன்றுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.1.5 கோடி வரை ஏமாற்றி இந்நிறுவனங்கள் பணம் பறித்துள்ளன. கடந்த ஓராண்டாக நடந்த இந்த மோசடி மூலம் ரூ.500 கோடி வரை அமெரிக்க பணக்காரர்களிடம் இருந்து பணம் பறிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர்களது வலையில் விழுந்த அமெரிக்க மூதாட்டி ஒருவர், தொடர்ந்து விடுக்கப்பட்ட மிரட்டல் காரணமாக அதிர்ச்சி அடைந்து பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த தகவலும் தற்போது அம்பலமாகியுள்ளது. இது குறித்து தானே போலீஸ் ஆணையர் பரம் வீர் சிங் கூறும்போது, ‘‘போலி கால் சென்டர் நிறுவனங்களில் பதிவான தொலைபேசி உரையாடல்களை விசாரணைக்காக கேட்டபோது இந்த விவகாரம் தெரியவந்தது’’ என்றார்.
இந்த மோசடி தொடர்பாக போலி கால்சென்டர் நிறுவனங் களில் பணியாற்றி வந்த 70 ஊழியர்களை போலீஸார் கைது செய்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவான 12 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.