ஜம்மு காஷ்மீரில் கத்துவா, ரஜோரி மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினரின் இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.
தானியங்கி துப்பாக்கியால் சுட்டும் பீரங்கிக் குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்திய நிலைகளை குறிவைத்து அவர்கள் நடத்திய தாக்குதலில் எல்லை கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் காயமடைந்தார். இருப்பினும் பாகிஸ்தான் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, "சுந்தர்பானி, பல்லன்வாலா, நவ்சேரா பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. இந்திய தரப்பில் படையினருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. எல்லையோர கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் காயமடைந்தார். நேற்று (வியாழக்கிழமை) மாலை 5.20 மணிக்கு தொடங்கிய தாக்குதல் இன்று காலை 5 மணி வரை நடைபெற்றது" என்றார்.
முன்னதாக, நேற்று பாகிஸ்தான் தாக்குதலில் பிஎஸ்எப் தலைமைக் காவலர் ஒருவர் உயிரிழந்தார். ஜிதேந்திர குமார் என்ற அந்த வீரர் பிகார் மாநிலத்தின் மோட்டிஹாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரைத் தவிர ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தார்.