இந்தியா

மோடியை விமர்சித்து ஃபேஸ்புக் பதிவு: உ.பி.யில் பள்ளி முதல்வர் கைது

செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்து பகிர்ந்த உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள ஒரு பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில், "மீரட் நகரின் சார்தானா நகரில் உள்ள தனியார் பள்ளியின் முதல்வர் முதாசிர் ரானா. இவர் நடந்து முடிந்த தசரா பண்டிகையின்போது பிரதமர் மோடி குறித்தும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் குறித்தும் விமர்சித்து ஃபேஸ்புக்கில் ஒரு பதிவிட்டிருந்தார். பிரதமர் மோடியும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தும் ராவணனின் பத்து தலைகளில் அடங்குவர் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பல்வேறு இந்துதுவா அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. போலீஸில் புகாரும் கொடுக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் ரானா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 153-ஏ, ஐ.டி. சட்டம் 66-ஏ ஆகியனவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

டெலீட் செய்தும் நடவடிக்கை:

தனது கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து ரானா தனது பதிவை ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கினார். இருந்தும் போலீஸில் கொடுக்கப்பட்ட புகாரின்படி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராணா, "யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. அதனால்தான் அந்தப் பதிவை நீக்கினேன். எனது கருத்தால் யார் மனமாவது புண்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறேன். யாரையும் வேதனைப்படுத்த நினைக்கவில்லை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

SCROLL FOR NEXT