இந்தியா

காவிரி வழக்கில் கர்நாடகாவுக்காக ஆஜராக முடியாது: வழக்கறிஞர் நாரிமன் முடிவால் அதிர்ச்சி

இரா.வினோத்

காவிரி வழக்கில் இனி கர்நாடகாவுக்காக ஆஜராக முடியாது என மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் திட்டவட்டமாக தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மிக மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான ஃபாலி எஸ்.நாரிமன் (87) கர்நாடக அரசின் சட்ட ஆலோசகராகவும், வழக்கறிஞராகவும் உள்ளார். குறிப்பாக காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்குகளில் தொடர்ந்து ஆஜராகி வருகிறார். அண்மை காலமாக காவிரி வழக்கில் இவரது வாதம் எடுபடவில்லை. கர்நாடகாவுக்கு எதிரான உத்தரவுகள் வெளியானதால், நாரிமனை கண்டித்து அம்மாநிலத்தில் கன்னட அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர்.

இதனால் நாரிமன் வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவையும் நேரில் சந்தித்து வழக்கில் பெற்ற தோல்விக்காக நாரிமன் மன்னிப்பு கேட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த சூழலில் தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை தொடர்ந்து மதிக்காமல் இருப்பதால் கர்நாடக அரசு சார்பில் இனி ஆஜராகப் போவதில்லை என்ற முடிவுக்கு அவர் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனது முடிவை உச்ச நீதிமன்றத்திலும் நாரிமன் தெரிவித்திருப்பதாகவும், கர்நாடக அரசின் சட்ட ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் தெரியவந்துள்ளது .

இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் சட்ட ஆலோசகர் பிரிஜேஷ் காலப்பா கூறும்போது, ‘‘உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு மதிக்காதது அவருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT