எல்லையில் பதற்றம் நீடிப்பதால் காஷ்மீரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள படை தளங்களில், ராணுவ தளபதி தல்பீர் சிங் நேரில் ஆய்வு செய்தார்.
பஞ்சாபின் பதான்கோட் மற்றும் காஷ்மீரின் உரியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இந்திய ராணுவம் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 7 தீவிரவாத முகாம்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. உதாம்பூரின் ராணுவ தலைமையகத்தில் இருந்துதான் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ எனப்படும் துல்லியமான தாக்குதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்டது.
இதையடுத்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே சண்டை நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இரு நாட்டு எல்லையில் பதற்றம் நிலவுவதால், இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங் நேற்று காஷ்மீரின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள ராணுவ முகாம்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது எல்லையில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் குறித்து, தல்பீர் சிங்கிடம் வடக்கு பிராந்திய படைப்பிரிவு பொறுப்பு வகிக்கும் லெப்டினன்ட் ஜெனரல் ஹூடா எடுத்துரைத்தார்.
பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடி கொடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ராணுவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதுகுறித்து பாதுகாப்புத் துறை அதிகாரி நேற்று கூறும்போது, ‘‘ராணுவ தளபதி தல்பீர் சிங், வடக்கு பிராந்திய ராணுவ தலைமை யிடத்துக்கு வந்தார். அங்கு உயரதி காரிகள் கூட்டத்தை அவசரமாக கூட்டி எல்லையில் உள்ள நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்’’ என்றார்.
மேலும் லீபா, டட்டாபானி, கேல், பிம்பார் போன்ற பகுதியில் 7 தீவிரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்த ராணுவ வீரர்களை தல்பீர் சிங் வெகுவாகப் பாராட்டினார். பின்னர் காஷ்மீரின் மேற்கு பகுதியில் உள்ள ராணுவ படைப்பிரிவு தலைமையிடத்துக்கு சென்றார். அங்கு மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் குறித்து தல்பீர் சிங்கிடம், மேற்கு படைப்பிரிவு லெப்டினன்ட் ஜெனரல் சுரீந்தர் சிங் எடுத்துரைத்தார்.
பின்னர் மூத்த படைப்பிரிவு அதிகாரிகளை சந்தித்து தல்பீர் சிங் ஆலோசனை நடத்தினார்.
உரி படைப்பிரிவு தளபதி மாற்றம்
உரியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 20 ராணுவ வீரர்கள் பலியாயினர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், உரி படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் கே.சோமசங்கர் அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து, ’28 மவுன்டெய்ன் டிவிஷனை’ சேர்ந்த அதிகாரி, உரி பிரிகேடியராக பொறுப்பேற்பார் என்று ராணுவ வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
இதற்கிடையில் பிரிகேடியர் சோமசங்கர் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக வெளியான தகவல்களை ராணுவம் மறுத்துள்ளது. இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறும்போது, ‘‘பிரிகேடியர் சோமசங்கர் நீக்கப்படவில்லை. அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். விரிவான விசாரணை நடத்துவதற்காக அவர் விலக்கி வைக்கப்பட்டுள்ளார். விசாரணை முடியும் வரை அவர் வேறு பிரிவில் பணியாற்றுவார்’’ என்று தெரிவித்தனர்.