இந்தியா

காவிரி விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து மைல்கல்லில் இந்தி எழுத்தை அழித்து கன்னட அமைப்பினர் நூதன போராட்டம்

இரா.வினோத்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசை கண்டிக்கும் வகையில் கர்நாடகாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கல்லில் இந்தி எழுத்துக்களை அழித்து கன்னட அமைப்பினர் நூதன போராட்டம் நடத்தினர். இதனால் ஊர் பெயரை கண்டுபிடிக்க முடியாமல் பிற மாநில ஓட்டுநர்கள் திணறி வருகின்றனர்.

காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகத்தை கண்டித்து மண்டியா மாவட்ட விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அண்மையில் பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலை மைல்கல்லில் சென்னை, சேலம், ஊட்டி, கோவை, சத்தியமங்கலம் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த‌ தமிழக நகரங்களின் பெயர்களை கருப்பு வண்ணம் பூசி அழித்தனர்.

இந்நிலையில் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டதாக கூறி, மீண்டும் மைல்கல் எழுத்துக்களை அழிக்கும் நூதன போராட்டத்தை மண்டியா மாவட்ட விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் கையில் எடுத்துள்ளனர்.

அதன் ஒருகட்டமாக பெங்களூரு-மைசூரு, ரங்கப்பட்டினா - பீதர், மற்றும் கனகப்புரா -மைசூரு சாலைகளில் உள்ள மைல்கல்லில் இடம்பெற்றிருந்த இந்தி எழுத்துக்களை சிவப்பு வண்ணம் பூசி அழித்து வருகின்றனர்.

இதனால் இந்த சாலைகள் வழியாக செல்லும் பிற மாநில வாகன ஓட்டிகளும், லாரி ஓட்டுநர்களும் ஊர் பெயரை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மைல்கல்லில் கன்னட அமைப்பினரால் அழிக்கப்பட்ட மண்டியா என்ற இந்தி எழுத்து.

SCROLL FOR NEXT