ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிந்த பிறகு, தெலங்கானா - ஆந்திரா இடையே நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைகள் உருவாகலாம் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக பத்ராச்சலம் ஸ்ரீராமரின் பெயரில் ஒரு பிரச்சினை உருவெடுத்துள்ளது.
தெலங்கானா மாநிலம் பத்ராச்சலம் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு பூஜைகள் செய்யும்போது, ‘ஸ்ரீ ராமச்சந்திராய நமஹ’ என்று பாராயணம் செய்யாமல், ‘ஸ்ரீராம நாராயண நமஹ’ என்று மந்திரம் சொல்வது வழக்கமாம். இதைக் கண்ட பக்தர்கள் சிலர், ராமரை அப்படி சொல்லக்கூடாது என்று அர்ச்சகர்களிடம் கூறியுள்ளனர். ஆனால் அர்ச்சகர்கள் இதற்கு செவிசாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து கோயில் நிர்வாக அதிகாரி ரகுநாத்தை சந்தித்த பக்தர்கள், தங்கள் கருத்தை வலியுறுத்தியுள்ளனர். உடனடியாக களத்தில் இறங்கிய அந்த அதிகாரி, “இனிமேல் பத்ராச்சலம் கோயிலில் ‘ஸ்ரீராம நாராயண நமஹ’ என்ற மந்திரத்தை பாராயணம் செய்யக்கூடாது” என்று உத்தரவிட்டுள்ளார்.
அர்ச்சகர்கள், இந்த உத்தரவை எதிர்த்து கோயில் ஊழியர்களுடன் இணைந்து உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
அர்ச்சகர்கள் தங்கள் போராட்டம் குறித்து கூறுகையில், “நாங்கள் ஸ்ரீராமச்சந்திராய நமஹ என்ற மந்திரத்துக்கு பதிலாக ஸ்ரீராம நாராயண நமஹ எனும் மந்திரத்தைதான் பரம்பரை பரம்பரையாக பாராயணம் செய்து வருகிறோம். அதேபோல் ஸ்ரீராமரின் நாமங்களில் ‘ராமநாராயண’ என்ற நாமமும் உண்டு. பக்த ராமதாசு காலத்திலிருந்தே பத்ராச்சல ராமரை ‘ராமநாராயண’ என்று கீர்த்தனை செய்வதுண்டு. இன்னும் சொல்லப் போனால், 1961-ம் ஆண்டில் பத்ராச்சல தேவஸ்தானம் அச்சிட்ட புத்தகங்களில் கூட சுவாமியை ‘ராமநாராயண’ என்று கூறப்பட்டுள்ளது.
ராமரை வைகுண்ட ராமன், ஓங்கார ராமன் என்றும் கூறுவதுண்டு” என்றனர்.
இது இப்படி இருக்க, பத்ராச்சலம் ஆலய நிர்வாக அதிகாரி ரகுநாத், சீமாந்திராவைச் சேர்ந்தவர் என்பதால் புதிய பிரச்சினைகளை எழுப்புகிறார் என்று அக்கோயில் ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுபற்றி ரகுநாத்திடம் கேட்ட போது, “நான் சீமாந்திராவைச் சேர்ந்தவன்தான். என் வேலையை நான் ஒழுங்காக செய்துவருகிறேன். ஊழியர்களில் சிலர் ஒழுங்காக வேலை செய்வ தில்லை. அதுபற்றி நான் கேட்டால், இந்தக் காரணத்தை கூறி பிரச்சினை செய்கிறார்கள்.
வேண்டுமானால் அந்த உத்தரவை நான் திரும்பப் பெறுகிறேன். இதற்குப் பிறகும் அவர்கள் திருப்தி அடையவில்லை என்றால், நான் இடமாறுதலில் செல்லவும் தயார். ஆனால் எனது வேலையை நான் தவறுக்கு இடமின்றி செய்து கொண்டிருக்கும்போது, நான் சீமாந்திராவைச் சேர்ந்தவன் என்பதால் பாரபட்சமாக நடப்பதாகக் கூறுவது மனதுக்கு கஷ்டமாக உள்ளது” என்றார்.
இதற்கிடையில், கோயில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் மேற்கொள்ளும் உண்ணாவிரதம் ஞாயிற்றுக்கிழமை 12வது நாளை எட்டியது. இவர்களின் போராட்டத்துக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சீமாந்திராவிலிருந்து வந்த சாதுக்கள் சிலர், பத்ராச்சல ஸ்ரீராமரை ‘ராமநாராயண' என்று அழைக்கக் கூடாதென்று கோயில் வளாகத்தில் சனிக்கிழமை ஆர்பாட்டம் செய்தனர். போலீஸ் தலையீட்டால் தற்காலிக அமைதி நிலவினாலும், பிரச்சினை தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.
அச்சுப் பிழையால் கலக்கம்!
ஆந்திர மாநிலம் 5-ம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில், கோதாவரி நதியின் பெருமையை பற்றி விளக்கப்பட்டுள்ளது. அப்பாடத்தில் கோதாவரி நதிக்கரையில் உள்ள கோயில்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தின் 93-ம் பக்கத்தில் கோதாவரி நதிக்கரையில் உள்ள கோயில்களில் பத்ராச்சலம் கோயிலும் ஒன்று எனக் குறிப்பிட்டு, பத்ராச்சலம் கோயிலுக்கு பதிலாக ஸ்ரீகாளஹஸ்தி கோயிலின் படம் அச்சிடப்பட்டுள்ளது.
இது எந்த மாதிரி பிரச்சினையை உண்டாக்குமோ என்று சிலர் அச்சப்படுகின்றனர்.