கர்நாடகாவில் வருகிற 2018-ம் ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவை தேர்தலைக் குறி வைத்து மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிராக திடீரென பல்டி அடித்துள்ளது.
தமிழகம் - கர்நாடகா இடையே நீண்டகாலமாக நிலவும் காவிரி நதி நீர் பிரச்சினையைத் தீர்க்க கடந்த 1990-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 17 ஆண்டுகள் இவ்வழக்கை விரிவாக விசாரித்த நடுவர் மன்றம் கடந்த 2007 பிப்ரவரி 5-ம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.
ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசும் சரி, தற்போது ஆட்சியில் உள்ள பாஜக அரசும் சரி, அரசியல் சுயலாபத்துக்காக கர்நாடகா பக்கமே தொடர்ந்து சாய்ந்து வரு கின்றன. உச்ச நீதிமன்றமும் பலமுறை கடுமையான உத்தரவு களைப் பிறப்பித்துவிட்டது.
கடைசியாக கடந்த 20-ம் தேதி பிறப்பித்த உத்தரவில் ‘‘காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும்’’ என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது.
பாஜகவின் இரட்டை வேடம்
இதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சதானந்த கவுடாவும், அனந்த் குமாரும் உமாபாரதியைச் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் குறித்து பேசினர். எனினும் உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பான உத்தரவு காரணமாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்க மத்திய அரசு முடிவு எடுத்தது.
இந்தச் சூழலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப் பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவை வளாகத் தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா திடீரென உண்ணாவிரதப் போராட் டம் தொடங்கினார். அமைச்சர்கள் சதானந்த கவுடா, அனந்த குமார் இருவரும் உறுதியளித்ததால் தேவகவுடா உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
பின்னர் தேவகவுடாவைத் தொலைபேசியில் அழைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் என வாக்குறுதியளித்தார்.
பிரதமரின் இந்த திடீர் மன மாற்றத்துக்குக் கர்நாடகாவை சேர்ந்த சதானந்த கவுடா, அனந்த் குமார் மற்றும் ரமேஷ் ஜிகஜினகி ஆகிய மூன்று மத்திய அமைச்சர் களே காரணம் என கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற இம்மூவரும், பிரதமர் மோடியிடம் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக விரிவாக ஆலோசித்துள்ளனர். அப்போது 2018-ம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காவிரி விவகாரம் வலுவாக எதிரொலிக் கும் என்பதையும் சூசகமாக சுட்டிக் காட்டியுள்ளனர்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விடாத காரணத்தினால் முதல்வர் சித்தராமையா மீதும், உண்ணாவிரதம் இருந்ததால் தேவகவுடா மீதும் மக்களிடம் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக எடுத்துரைத்துள்ளனர்.
மேலும் காவிரி விவகாரத்தில் பிரதமர் தலையிட மறுப்பதால் கர்நாடகாவில் பாஜகவுக்கு எதிரான அலை எழுந்து வருவதைக் குறிப் பிட்டும், மாநிலத்துக்கு சாதகமான முடிவை எடுத்தால் மட்டுமே வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவால் பிழைக்க முடியும் என்பதையும் விளக்கியுள்ளனர்.
தமிழகத்தால் லாபம் இல்லை
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் மத்திய அரசுக்கோ, பாஜகவுக்கோ பெரிதாக லாபம் கிடைக்கப் போவதில்லை. தமிழக மக்களும் பாஜகவை தனிக்கட்சி யாக அங்கீகரிக்கப் போவதில்லை. பலன் அனைத்தும் திமுக அல்லது அதிமுகவுக்கு தான் சேரும்.
கர்நாடகாவுக்குச் சாதகமாக செயல்பட்டால் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் கர்நாடக மக்கள் பாஜகவை ஆதரிப்பார்கள். இதனால் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு பிரகாசமான வாய்ப்பு ஏற்படும் என்றும் அடுக்கடுக்கான அரசியல் நிலவரங்களை அவர்கள் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளனர்.
இதனால் மனம் மாறிய பிரதமர் மோடி காவிரி மேலாண்மை வாரியத்தை எதிர்க்க முடிவெடுத்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும்படி தெரிவித்துள்ளார். அதன்படியே உச்சநீதிமன்றத்தில் 10 நாட்கள் கழித்து திடீரென எதிர்ப்பு மனு தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரதமரின் இந்த அரசியல் கணக்கு எதிர்பார்த்தபடியே தற் போது கர்நாடகாவில் எடுபடத் தொடங்கி இருக்கிறது. அதற்கேற் றார் போல் கர்நாடக சட்டப்பேரவை யில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய 3 பெரிய கட்சிகளும் பிரதமர் மோடியை பாராட்டி தீர்த்துள்ளன. மத்திய அமைச்சர்களான அனந்த குமார், சதானந்த கவுடா, ரமேஷ் ஜிகஜினகி ஆகிய மூவரும் இல்லாவிட்டால் இந்த வெற்றி சாத்தியம் இல்லை என முதல்வர் சித்தராமையா பகிரங்கமாகவே பாராட்டியுள்ளார்.
தேர்தலைக் குறி வைத்து பிரதமர் மோடி அடித்த இந்த திடீர் பல்டியால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற தமிழகத்தின் நம்பிக்கை சிதைக்கப்பட்டுள்ளது.