இந்தியா

முலாயம் கட்சியுடன் பகுஜன் ரகசிய புரிதலா?- மோடி மீது மாயாவதி தாக்கு

ஒமர் ரஷித்

சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கட்சிகள் பரஸ்பர புரிதல்களுடன் உ.பி.மக்களை ஏமாற்றி வருகின்றன என்று பிரதமர் மோடி பேசியதை வெறுத்து ஒதுக்குவதாக மாயாவதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவர் மாயாவதி கூறும்போது, “பிரதமர் மோடி பொய்களையும் கட்டுக்கதைகளையும் பரப்புகிறார், பகுஜன் - சமாஜ்வாதி குறித்த அவரது கருத்து நகைப்புக்குரியதாகும்.

பகுஜன் - சமாஜ்வாதி புரிதல் குறித்து பிரதமர் பேசுவதன் மூலம் எதையோ சாதிக்க விரும்புகிறார் என்பது புரிகிறது. ஆனால் எங்களுக்கு இது புழக்கத்தில் இருக்கும் ஒரு வசனத்தை துரதிர்ஷ்டவசமாக நினைவூட்டுகிறது, அதாவது, ‘திருடன் போலீஸ் மீது குற்றம் சுமத்துவது’ என்ற வசனமே அது.

பாஜக-வும் அதன் தாய் அமைப்பான ஜன சங்கமும் 1967 முதல் முலாயம் சிங்குடன் தொடர்பு வைத்திருந்தனர். 1967, 77 மற்றும் 89-ம் ஆண்டு தேர்தல்களில் இணைந்து போட்டியிட்டனர். சமீபமாகக் கூட பிஹாரில் மதச்சார்பற்ற மஹாகத்பந்தனுக்கு எதிராக சமாஜ்வாதியும் பாஜகவும் வெளிப்படையாக செயல்பட்டனர். மோசமாகத் தோற்றனர்.

உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை சமாஜ்வாதியும் பாஜகவும் எப்படி ஒருவருக்கொருவர் மென்மையாக இருந்து வருகின்றனர் என்பதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். மறைமுக புரிதல் மூலம் உ.பி.யில் வகுப்புவாத பதற்ற நிலைகளை உருவாக்கி வருகின்றனர். இருவரும் தந்திரமாக கூட்டிணைந்து கொண்டு வகுப்புவாத அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

(முசாபர்நகரைக் குறிப்பிடாமல்) மக்கள் உயிர்களை இழந்தனர், நிறைய பேர் வீடுகளை இழந்து வெளியேறினர். ஆனால் இன்றுவரை சமாஜ்வாதிக் கட்சி குற்றவாளிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முக்கியக் குற்றவாளி சுதந்திரமாகச் சுற்றித் திரிவதோடு வகுப்புவாத நடவடிக்கைகளையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார். இதற்குச் சாதகமாக நடந்து கொள்ளும் பாஜக, இதுவரை உ.பி.யில் நடக்கும் குண்டர்கள் ஆட்சியைக் கண்டித்து சமாஜ்வாதிக்கு ஒரு துண்டு காகிதம் கூட அனுப்பவில்லை.

உ.பியிலிருந்து ஒரு துண்டு அறிக்கையைக் கூட ஆளுநரிடமிருந்து கேட்கவில்லை. அயோத்தியில் பாஜக-வும் சமாஜ்வாதியும் மட்டரகமான அரசியலைச் செய்து வருகின்றனர். வரவிருக்கும் தேர்தலில் பாஜக-வும் சமாஜ்வாதியும் சேர்ந்து பணியாற்றி பகுஜனை சாய்க்க முயற்சி செய்வார்கள் என்பது இங்கு நிலவும் மிகவும் இயல்பான கருத்து. இதனால் சமாஜ்வாதி-பகுஜன் புரிதல் என்பது மிகப்பெரிய நகைச்சுவையாக இங்கு பார்க்கப்படுகிறது. எனவே மோடியின் கட்டுக்கதைகளையும் பொய்களையும் மக்கள் நம்பத்தயாராக இல்லை என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்றார் மாயாவதி.

SCROLL FOR NEXT