புதுடெல்லி: ராஜஸ்தானின் பார்மர் மாவட்டக் கிராமப் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தொடர்ந்து ஏழாவது முறையாக 86 வயது மூதாட்டி தேர்வாகி உள்ளார். அவர் போட்டியின்றி தேர்வாகி வருவதால் 42 வருடங்களாக அக்கிராமத்தில் தேர்தலே நடைபெறவில்லை.
ராஜஸ்தானில் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், போட்டியிடும் வேட்பாளர்கள் வீடு வீடாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற கடும் போட்டி சூழலில், பார்மர் மாவட்ட வீரேந்தர் நகர் கிராமப் பஞ்சாயத்திற்கு மட்டும் ஒரு வித்தியாசமான வேட்பாளர் தலைவராகப் போட்டியின்றி தேர்வாகி உள்ளார். அவர் முன்னாள் மாநில அமைச்சரான ஹேமராம் சவுத்ரியின் மனைவியான 86 வயதான பிகி தேவி.
அவர் 7-வது முறையாக தொடர்ந்து அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒட்டுமொத்த கிராம மக்களும் மீண்டும் ஒருமனதாக ஒன்றிணைந்து, கிராமத்தின் பொறுப்பை பிகி தேவியிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால், கடந்த 42 வருடங்களாக வீரேந்திர நகர் கிராமத்தில் பஞ்சாயத்து தேர்தலே நடைபெறவில்லை. இதனால், அங்கு தேர்தல் பிரச்சாரமும் நடைபெற்றதில்லை. பிகி தேவியின் வெற்றி வட மாநிலங்களில் பேசுபொருளாகி உள்ளது.
பிகி தேவி முதன்முதலில் 1984-ம் ஆண்டு வீரேந்திர நகர் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றுமுதல் நான்கு தசாப்தங்களாக, அவருக்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இம்முறையும், அவருக்கு எதிராக யாரும் போட்டியிடவில்லை. இதையடுத்து, தேர்தல் நடத்தும் அதிகாரி அவரை அதிகாரப்பூர்வமாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவராக அறிவித்தார்.